2013-07-22 15:11:36

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணம்


ஜூலை,22,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது முதல் வெளிநாட்டு மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை இத்திங்கள் உரோம் நேரம் காலை 8.45 மணிக்குத் தொடங்கினார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இத்திருப்பயணத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ரியோ டி ஜெனீரோவின் “Galeão/Antonio Carlos Jobim” பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடையும்போது அந்நாட்டு நேரம் மாலை 4 மணியாக இருக்கும். இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடைப்பட்ட கால இடைவெளி 8 மணி 30 நிமிடங்களாகும்.
இச்செவ்வாய் முதல் வருகிற ஞாயிறுவரை நடைபெறும் இவ்விளையோர் தின நிகழ்வுகள், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குகள்(மத்.28,19)”என்ற தலைப்பில் இடம்பெறும்.
மேலும், 12 மணி 15 நிமிடங்கள் கொண்ட இந்த நீண்ட விமானப் பயணத்தில் தான் கடந்து செல்லும் மௌரித்தானியா, அல்ஜீரியா, செனெகல், இன்னும் இத்தாலி ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் ஆசீரையும் தெரிவிக்கும் தந்திச் செய்திகளையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பயணத்தில் பிரேசில் பாதுகாவலர் புனித அப்பெரிசிதா அன்னைமரியா திருத்தலம் செல்வார், பிரேசில் அரசுத்தலைவரைச் சந்திப்பார், இலட்சக்கணக்கான உலக இளையோரைச் சந்திப்பார், 14 உரைகளுக்குமேல் நிகழ்த்துவார், இப்படி பல முக்கிய நிகழ்வுகளை நடத்தி, ஜூலை 29, வருகிற திங்கள் முற்பகல் 11.30 மணியளவில் உரோம் வந்தடைவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
A330 ஆல் இத்தாலியா விமானத்தில் இத்திருப்பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் இத்திங்களன்று தனது டுவிட்டர் பக்கத்தில், இன்னும் சில மணிநேரங்களில் நான் பிரேசில் சென்றடைவேன், 28வது உலக இளையோர் தினத்தைக் கொண்டாடுவதற்காக விரைவில் உங்களோடு இருக்கப்போகிறேன் என்பதால் எனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது என்று எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.