2013-07-22 15:23:28

திருத்தந்தை பிரான்சிஸ் : பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தை அன்னைமரியிடம் ஒப்படைப்பு


ஜூலை,22,2013. இச்சனிக்கிழமை மாலையில் உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவுக்குச் சென்று தனது பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தை அன்னைமரியின் பாதுகாவலில் வைத்து, ரியோ டி ஜெனீரோவில் கூடுகின்ற மற்றும் உலகெங்கும் இருக்கின்ற இளையோருக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமை மாலை 4.45 மணிக்கு, புனித மேரி மேஜர் பசிலிக்கா சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், அப்பசிலிக்காவிலுள்ள, உரோம் மக்களின் அன்னைமரி திருப்படத்தின் முன்பாக ஏறக்குறைய அரைமணி நேரம் தனியாகச் செபித்த பின்னர், ஒரு மலர்க் கிரீடத்தையும், 28வது உலக இளையோர் தின அடையாளம் பதித்த மெழுகுதிரியையும் ஏற்றி வைத்தார்.
அன்னைமரி திருப்படம் வைக்கப்பட்டுள்ள சிற்றாலயத்துக்குத் திருப்பூட்டறையின் பக்கக்கதவு வழியாக நேரிடையாகச் சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் செலவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், அந்நேரத்தில் அங்கிருந்த விசுவாசிகளிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி, இந்தப் பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தில் "செபம், விசுவாசம், தபம்" ஆகியவற்றோடு தன்னோடு உடன் வருமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.