2013-07-22 15:18:03

திருத்தந்தை பிரான்சிஸ் : எப்பொழுதும் செபத்தையும் செயலையும் இணைத்து வாழுங்கள்


ஜூலை,22,2013. பொதுநிலையினராகவோ, துறவிகளாகவோ அல்லது அருள்பொழிவு செய்யப்பட்ட அருள்பணியாளர்களாகவோ யாராக இருந்தாலும் கிறிஸ்தவர்களுக்குத் தியானமும் சேவையும், செபமும் செயலும் தேவைப்படுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இயேசுவுக்கு மிகவும் விசுவாசமான சீடர்களாயிருந்த மார்த்தா, மரியா ஆகிய இரு சகோதரிகள் தங்களது பெத்தானியா வீட்டில் இயேசுவை உபசரித்த நிகழ்வை விளக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தியை மையமாக வைத்து மூவேளை செப உரையில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், தேவையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கு உதவிகளைச் செய்யத் தூண்டாத செபம் பலனற்ற மற்றும் முழுமையற்ற செபம் என்று கூறினார்.
அதேநேரம், திருப்பணிகளைச் செய்யும்போது வேலையை மட்டும் செய்துவிட்டு செபத்தில் கடவுளோடு உரையாடல் நடத்த நேரம் ஒதுக்காதபோது, தேவையில் இருக்கும் நம் சகோதரரில் பிரசன்னமாக இருக்கும் கடவுளுக்குப் பணிசெய்வதில் ஆபத்தைக் கொண்டுவரும் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதீன வாழ்வின் தந்தையான புனித பெனடிக்ட் சொல்லியிருப்பதுபோல, செபமும் செயலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றும் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், செபமும் செயலும் ஒன்றிலிருந்து மற்றதை பிரிக்கமுடியாததாய் இருக்கும்அதேவேளை, அனைத்துப் பிறரன்புப் பணிகளுக்கும் செபம் அடித்தளமாகச் செயல்படுகின்றது என்று கூறினார்.
நாம் பிறருக்கு உதவி செய்யும்போது அது இயேசுவின்மீதுள்ள அன்பால் செய்கிறோம், தேவையில் இருப்போருக்கு தொண்டுபுரியும்போது அது நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
நமது அனைத்துச் செயல்களுக்கும் முக்கிய ஊற்றாக இருக்கும் இறைவார்த்தையைக் கேட்பதிலிருந்து, கிறிஸ்தவர்களின் வாழ்வில் சேவையும் பிறரன்புப் பணிகளும் ஒருபோதும் பிரிந்துவிடாமல் இருக்க வேண்டும், எப்படியெனில் சீடருக்குரிய மனநிலையுடன், இயேசுவின் பாதத்தடியில் அமர்ந்து இறைவார்த்தையைக் கேட்ட மரியாபோல.. என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.