2013-07-20 15:22:31

திருத்தந்தை பிரான்சிஸ் : மும்பையின் முன்னாள் பேராயர் கர்தினால் பிமென்டா அவர்களின் இறப்புக்கு இரங்கல்


ஜூலை,20,2013. இந்தியாவின் மும்பை உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Simon Ignatius Pimenta அவர்கள் இறைபதம் அடைந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களுக்கு இச்சனிக்கிழமையன்று அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், இறந்த கர்தினால் Pimenta அவர்கள் மும்பைக் கத்தோலிக்கச் சமூகத்துக்கும், உலகளாவியத் திருஅவைக்கும் ஆற்றியுள்ள அருஞ்சேவைகளைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மும்பையின் Marol புறநகர்ப் பகுதியில் 1920ம் ஆண்டு மார்ச் முதல் தேதி பிறந்த கர்தினால் Simon Ignatius Pimenta, மெய்யியல் மற்றும் இறையியலை புனித 10ம் பத்திநாதர் குருத்துவக் கல்லூரியில் முடித்து 1949ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி குருவானார். கணிதவியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ள இவர், 1954ம் ஆண்டில் உரோம் உர்பான் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் திருச்சபை சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
1971ம் ஆண்டு மும்பை உயர்மறைமாவட்டத் துணை ஆயராகவும், 1978ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பம்பாய் உயர்மறைமாவட்டப் பேராயராகவும் நியமிக்கப்பட்ட இவர் 1988ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.
93 வயதாகும் கர்தினால் Simon Ignatius Pimenta இவ்வெள்ளி இரவு இறந்தார். இந்திய ஆயர் பேரவையின் தலைவராக மூன்று முறை பணியாற்றியுள்ள கர்தினால் Pimenta, மும்பைத் திருஅவைக்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதற்குமே மாபெரும் தலைவராக இருந்தவர். இவர் பம்பாய் உயர்மறைமாவட்டப் பேரவையை நடத்தி மேய்ப்புப்பணிகளுக்கும் பிறரன்புப்பணிகளுக்குமெனத் தன்னை அர்ப்பணித்திருந்தார். இவர் காலத்தில் 12 மருத்துவமனைகளும் 44 சிறிய மருத்துவமனைகளும் திறக்கப்பட்டன. 1996ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மேய்ப்புப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார் கர்தினால் Simon Ignatius Pimenta.
இவரின் இறப்போடு திருஅவையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 204 ஆனது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 112 ஆக உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.