2013-07-20 15:39:16

திருத்தந்தை பிரான்சிஸ் : போரில் எல்லாமே இழக்கப்படுகின்றன


ஜூலை,20,2013. அமைதியில் எதுவும் இழக்கப்படுவதில்லை, ஆனால் போரில் எல்லாமே இழக்கப்படுகின்றன என்று இரண்டாம் உலகப் போரின்போது திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள் கூறியதை மீண்டும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாம் உலகப் போரின்போது உரோமின் புனித இலாரன்ஸ் பசிலிக்காவில் குண்டுகள் வீசப்பட்டதன் 70ம் ஆண்டு இவ்வெள்ளிக்கிழமையன்று நினைவுகூரப்பட்டதையடுத்து, உரோம் மறைமாவட்டப் பிரதிநிதி கர்தினால் அகுஸ்தீனோ வல்லினி அவர்களுக்கு அனுப்பிய செய்தியில், குண்டுகள் வீசப்பட்ட அந்தத் துன்பமான நாளின் நினைவு, திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள் அன்று கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைதி கடவுளின் கொடை என்றும், திறந்த இதயங்கள் அதனைப் பெற்றுக்கொள்ளும் என்றும், அமைதி மற்றும் ஒப்புரவைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உழைக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குண்டுகள் வீசப்பட்ட அந்நேரத்தில் உரோமிலும், இத்தாலியிலும் வாழ்ந்த பல ஆயர்களும், அருள்பணியாளரும், அருள்சகோதரிகளும் நல்ல சமாரியர்களாக, குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ததையும் திருத்தந்தை பிரான்சிஸ் நினைவுகூர்ந்துள்ளார்.
1943ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி உரோம் புனித இலாரன்ஸ் பசிலிக்காவில் குண்டுகள் வீசப்பட்டன. இந்நினைவு நாளான இவ்வெள்ளி மாலையில், கர்தினால் வல்லினி இப்பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.