2013-07-19 15:59:14

திருத்தந்தை பிரான்சிஸ் : பொருளாதார அமைப்புகளுக்கு ஒரு சிறப்பு திருப்பீட அவை


ஜூலை,19,2013. திருப்பீட பொருளாதார-நிர்வாக அமைப்பின் நிறுவனத்துக்கு உதவும் ஆலோசனை அவை ஒன்றை இவ்வெள்ளிக்கிழமையன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்தின் பொருளாதார மற்றும் நிர்வாகத் துறைகளைச் சீரமைப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு அவை, தகவல்களைச் சேகரித்து திருத்தந்தைக்கு வழங்கும். அத்துடன், இவ்வவை, திருப்பீடத்தின் நிர்வாக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை ஆய்வுசெய்யும் கர்தினால்கள் குழுவுடன் ஒத்துழைக்கும்.
வத்திக்கான் நிர்வாகத்தின் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் மிகுந்த கவனமுடன் திட்டமிடுவதற்கும், தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளை எளிதாக்கும் நோக்கத்திலும் இச்சிறப்பு அவை உருவாக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முறைப்படி எழுதிக் கையொப்பமிடப்பட்டுள்ள ஆணையில் இச்சிறப்பு அவையின் நோக்கங்களும், அவ்வவை உறுப்பினர்களின் நியமனங்களும் விளக்கப்பட்டுள்ளன.
சட்டம், பொருளாதாரம், நிதி, நிர்வாகம் ஆகியவற்றில் திறமைமிக்க, பல நாடுகளைச் சேர்ந்த பொதுநிலையினர், இச்சிறப்பு அவைக்கென நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வத்திக்கான் அல்லது திருஅவையின் பொருளாதார நிறுவனங்களின் சிறந்த ஆலோசகர்கள் அல்லது அந்நிறுவனங்களை மதிப்பீடு செய்பவர்களாகத் தற்போது செயல்பட்டு வருகின்றனர். இவ்வவையில் செயலர் மட்டும் ஓர் அருள்பணியாளர் ஆவார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரேசில் திருப்பயணத்தை முடித்துத் திரும்பியவுடன் இவ்வவையின் முதல் கூட்டம் நடக்கும்.
இவ்வவையின் உறுப்பினர்கள் ----
Mr. Dr. Joseph FX Zahra (Malta), தலைவர்.
Msgr.Lucio Angel Vallejo Balda (திருப்பீட பொருளாதாரத் துறையின் செயலர்), செயலர்.
Mr. Jean-Baptiste de Franssu (France), Dr. Enrique Llano (Spain)
Dr. Jochen Messemer (Germany), Ms. Francesca Immacolata Chaouqui (Italy)
Mr. Jean Videlain-Sevestre (France)Mr. George Yeo (Singapore)
Dr.Zahra and Dr.Messemer (திருப்பீட பொருளாதாரத் துறையின் பன்னாட்டு மதிப்பீட்டாளர்கள்)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.