2013-07-19 16:02:04

கர்தினால் டர்க்சன் : கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் இறையன்புக்குச் சான்று பகர அழைப்பு


ஜூலை,19,2013. கத்தோலிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், மாணவர்களும், மற்ற பணியாளர்களும் தங்களின் அன்றாடப் பணிகளில் இறையன்புக்குச் சான்று பகருமாறு கேட்டுக்கொண்டார் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
பிரேசில் நாட்டின் Minas Gerais மாநிலத்தின் Belo Horizonte என்ற நகரத்தில், “அழைப்பும் வாழ்க்கைத் தொழிலும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் உலக மாநாட்டில் இவ்வெள்ளிக்கிழமையன்று உரையாற்றிய கர்தினால் டர்க்சன், கத்தோலிக்க சமூகக் கோட்பாடுகளின் அடிப்படையில் கல்வியும் ஆசிரியப் பணியும் இடம்பெற வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு துறையிலும் நிறையப் போட்டிகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் இக்காலத்தில், நிறைய மதிப்பெண்கள் எடுத்து பட்டம் பெறுவது வெற்றியை நிர்ணயிக்காது என்றுரைத்த கர்தினால் டர்க்சன், மனித சமுதாயத்தில் அனைவரின் நன்மைக்காகச் செயல்படும் திறமையைக் கொண்டிருப்பது அவசியம் என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.
ஒவ்வொரு துறையிலும் தங்களின் நிறுவனங்களைத் திறமையுடன் நடத்திச் செல்லும் முயற்சிகளில், ஊழல், இலஞ்சம், பேராசை, வளங்களை மோசமாகக் கையாளுதல், விதிமுறைகள் இல்லாமை, எனத் தடைகள் வெளியிலிருந்தும் வருகின்றன என்றும் கர்தினால் கூறினார்.
ஒருவர் தனது அன்றாடப் பணிவாழ்வில் விசுவாசத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையை எதிர்நோக்குவது, இக்காலத்தின் கடும் தவறுகளில் ஒன்றாக இருக்கின்றது என்பதைக் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன், இச்சவால்களுக்கு மத்தியில் ஞானமுடன் செயல்படுமாறு, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட அனைவரையும் கேட்டுக்கொண்டார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.