2013-07-18 16:23:08

நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாளில் சமுதாயப் பணிகளை மேற்கொள்ள ஐ.நா. அழைப்பு


ஜூலை,18,2013. மனித உரிமைகளுக்காகவும், சமுதாய நீதிக்காகவும் தன் வாழ்வின் 67 ஆண்டுகளைச் செலவிட்ட நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள் அன்று, ஒவ்வொருவரும் 67 நிமிடங்களாவது சமுதாயப் பணிகளை மேற்கொள்வது சிறந்த ஓர் அடையாளமாக இருக்கும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
ஜூலை 18, இவ்வியாழனன்று, உலகப் புகழ்பெற்ற நெல்சன் மண்டேலா அவர்களின் 95வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நாளைச் சிறப்பிக்கும் நோக்கத்துடன், ஜூலை 18ம் தேதியை, நெல்சன் மண்டேலா உலக நாள் என்று ஐ.நா. பொதுஅவை 2010ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.
நெல்சன் மண்டேலா அவர்கள் தென் ஆப்ரிக்காவில் நிலவி வந்த இனவெறிக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்திற்காக, 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தபோது, அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்த நோயின் தாக்கத்தால், அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமடைந்து வருகிறார்.
இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட அவரது 95வது பிறந்தநாளையொட்டி, தென் ஆப்ரிக்காவின் அனைத்து பள்ளிகளிலும், காலை பாடங்கள் துவங்குவதற்கு முன், நெல்சன் மண்டேலா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி, குழந்தைகள் பாடல்கள் பாடினர்.
1994ம் ஆண்டு முதல் தென் ஆப்ரிக்காவை குடியரசாக மாற்றிய நெல்சன் மண்டேலா அவர்கள், அக்குடியரசின் முதல் அரசுத் தலைவராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். இதுவரை 250க்கும் அதிகமான உலக விருதுகளைப் பெற்றுள்ள அவர், 1993ம் ஆண்டு நொபெல் அமைதி விருதையும் பெற்றுள்ளார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.