2013-07-18 16:16:01

இயேசுவின் மீது இளையோர் கொண்டிருக்கும் அன்பும், நம்பிக்கையும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் வழி இன்னும் ஆழப்படும்


ஜூலை,18,2013. இயேசுவின் மீது இளையோர் கொண்டிருக்கும் அன்பும், நம்பிக்கையும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் வழியே இன்னும் ஆழப்பட வேண்டும் என்றும், நாளைய உலகில் இவ்விளையோர் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவேண்டும் என்றும் வேண்டிக்கொள்வோம் என்ற அழைப்பை இந்திய ஆயர் ஒருவர் விடுத்தார்.
ஜூலை 16ம் தேதி, கார்மேல் அன்னை திருநாளன்று, மும்பை நகரின் அந்தேரியில் அமைந்துள்ள கார்மேல் அருள் சகோதரிகள் இல்லத்தில் திருப்பலியாற்றிய மும்பை துணை ஆயர் Agnelo Gracias அவர்கள், அன்னையின் பரிந்துரையால், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நல்வாழ்வைப் பெறவும், உலக இளையோர் நாளைக் கொண்டாடச் செல்லும் இளையோர் தங்கள் நம்பிக்கையில் வளரவும் செபங்களை எழுப்பும்படி கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 10,000க்கும் அதிகமான இளையோர் கையெழுத்திட்டுள்ள ஒரு மரச்சிலுவை ரியோ டி ஜெனீரோ நகரில் திருத்தந்தையிடம் அளிக்கப்படும் என்றும், இதனைப் பெற்றுக்கொள்ள திருத்தந்தை விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும் CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Lewe Youth Movement, அதாவது, வாழ்வு இளையோர் இயக்கம் என்ற அமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலுவை, உலக இளையோர் நாட்களில் ரியோ டி ஜெனீரோ நகரில் இளையோர் முன்னிலையில் வைக்கப்படும் என்றும், இச்சிலுவையில் மேலும் கையெழுத்திட விழையும் இளையோர் அவ்வாறே செய்யலாம் என்றும் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Maria Isabel Magana கூறியுள்ளார்.
தங்கள் நம்பிக்கையை இன்னும் ஆழமாக வாழ்வதற்கு, தேவைப்பட்டால், கிறிஸ்துவுடன் தாங்களும் சிலுவையில் அறையப்பட தயாராக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த இளையோர் இச்சிலுவையில் தங்கள் கையெழுத்தை இடுகின்றனர் என்று Magana விளக்கம் அளித்தார்.

ஆதாரம் : AsiaNews / CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.