2013-07-17 15:53:35

திருத்தந்தை பிரான்சிஸ் : மனித சமுதாயத்தில் வலுவற்றோர் என்று நாம் கருதுவோரே, இறைவன் படைப்புக்கள் அனைத்திலும் தலைசிறந்தவர்கள்


ஜூலை,17,2013. மனித சமுதாயத்தில் வலுவற்றோர் என்று நாம் கருதுவோரே, இறைவன் படைப்புக்கள் அனைத்திலும் தலைசிறந்தவர்கள்; எனவே, வாழ்வைப் பாதுகாப்பதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்வது இறைவனுக்கு நாம் தரும் தகுந்த பதிலிருப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
2001ம் ஆண்டு முதல் அயர்லாந்து நாட்டின் தலத்திருஅவை அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறன்று 'வாழ்வுக்கான நாள்' என்று கொண்டாடி வருகிறது. இவ்வாண்டு அக்டோபர் 6ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் இந்த நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாண்டு கொண்டாடப்படும் இந்த சிறப்பு நாளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மையக் கருத்தான, "வாழ்வின் பாதுகாப்பு - எவ்வகையிலும் தகுதியானது" (Care for Life – It’s Worth It) என்ற வார்த்தைகள், 2005ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராக இருந்த வேளையில் வழங்கிய ஒரு மறையுரையிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள் என்று அயர்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
நோயுற்றோர், வயதானோர், வறியோர், கருவில் உள்ள குழந்தைகள் என்று மனித சமுதாயத்தில் வலுவற்று காணப்படும் மக்களே, இறைவன் தன் உருவில் படைத்துள்ள மிக அற்புதமான படைப்புக்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பு அளிக்கவேண்டும் என்று திருத்தந்தையின் செய்தி வலியுறுத்தியுள்ளது.
1995ம் ஆண்டு "வாழ்வின் நற்செய்தி" (Evangelium Vitae) என்ற தலைப்பில் தான் வெளியிட்ட சுற்றுமடலைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்வின் நாளைக் கொண்டாடும்படியாக முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் ஊக்குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CBC, Ireland / ICN








All the contents on this site are copyrighted ©.