2013-07-16 15:22:28

இறைவேண்டுதல் பற்றிய இரு உவமைகள் - சில பாடங்கள்


RealAudioMP3 'இறைவனிடம் வேண்டுதல்' என்பது வாழ்நாள் முழுவதும் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம். இறைவேண்டுதல் அல்லது செபம் என்று சொன்னதும், நம்மிடம் ஒரு சில எண்ணங்கள் மேலோங்கி எழுகின்றன. தனிப்பட்ட நேரத்தையும், இடத்தையும் ஒதுக்கி, இறைவனோடு நாம் தொடர்பு கொள்வதையே நாம் 'செபித்தல்' அல்லது 'இறை வேண்டுதல்' என்று பெரும்பாலும் கூறுகிறோம். அனைத்து முக்கியமான மதங்களிலும் கோவில்கள், ஆலயங்கள் என்று உருவாக்கப்பட்டிருப்பது இந்த எண்ணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒதுக்கப்பட்ட இந்த இடங்களில், நேரங்களில் நாம் உடலளவில் மேற்கொள்ளும் முயற்சிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. முழந்தாள் படியிடுதல், நின்றபடி கைகளை விரித்தல், தரையில் சம்மணமிட்டு அமர்தல், அல்லது, நெடுஞ்சாண்கிடையாக விழுதல், கண்களை மூடுதல், குழுவாக, அல்லது, தனியாக குரல் எழுப்பி வார்த்தைகளைச் சொல்லுதல் என்று... நாம் உடலளவில் மேற்கொள்ளும் முயற்சிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

செபித்தல் என்பது இவை மட்டும் அல்ல, இவற்றைத் தாண்டிய பல வேளைகளில் நாம் செபிக்கிறோம் என்பதையும் நாம் உணர்வது நல்லது. எடுத்துக்காட்டாக, நாம் நடந்து செல்லும்போது, ஒரு கல்லோ, முள்ளோ, நம் காலைப் பதம்பார்த்தால், 'அம்மா' அல்லது, 'அப்பா' என்றோ, சிலவேளைகளில், 'கடவுளே' என்றோ குரல் எழுப்புகிறோம். பல வேளைகளில், யாராவது ஒருவர் துன்புறுவதைக் காணும்போது, 'அட கடவுளே!' என்று நம்மையும் அறியாமல் சொல்கிறோம். மகிழ்வின் உச்சத்தில், 'Oh my God!' 'ஓ என் கடவுளே!' என்று கூச்சலிடுகிறோம். இவ்விதம், வாழ்வில் நாம் பெறும் பல்வேறு அனுபவங்களின்போது கடவுளின் பெயரைச் சொல்கிறோமே, அப்போதெல்லாம், மனதார நாம் கடவுளை நினைக்கிறோமா என்ற கேள்வி எழுந்தாலும், இறைவனுடன் எதோ ஒரு வகையில் நாம் தொடர்பு கொள்கிறோம் என்பதையும் மறுக்கமுடியாது.
இவ்வகையில் நம்மைச் சுற்றி உருவாகும் பல்வேறு அனுபவங்களை ஒன்றாகத் திரட்டிச் சிந்திக்கும்போது, இறைவனுடன் நாம் கொள்ளும் ஒவ்வொரு தொடர்பும் செபமாக மாறுகிறது. இத்தகைய செபங்களுக்கு, தனியே ஒதுக்கப்பட்ட நேரம், காலம், இடம், சூழல், என்று எதுவுமே தேவையில்லை என்ற பேருண்மையைக் கற்றுக்கொள்ளலாம்.

கடவுளுக்கென்று தனி இடங்களை ஒதுக்கி, அங்கும் அவரைச் சந்திக்க பல விதிமுறைகளை வகுத்து, இறைவனை மக்களிடமிருந்து வெகுதூரத்தில் வைத்திருந்தனர் இஸ்ரயேல் மதத் தலைவர்கள். இம்முயற்சிகளை முறியடிக்கும் ஒரு நோக்கத்தில், இயேசு இறைவனை ‘தந்தை’ என்று மக்களிடம் அறிமுகப்படுத்தினார். அவரை எந்நேரத்திலும் அணுகி வரலாம் என்பதையும் கூறிவந்தார். நாம் கடந்த ஒன்பது வாரங்களாகச் சிந்தித்து வரும் 'நள்ளிரவில் வந்து தொல்லைகொடுத்த நண்பர்', 'நேர்மையற்ற நடுவரும், கைம்பெண்ணும்' ஆகிய இரு உவமைகளையும் இந்தக் கண்ணோட்டத்திலும் சிந்திக்கலாம். இன்றையத் தேடலில், பொதுவாக, செபத்தின் பல்வேறு பரிமாணங்களைத் தெளிவாக்கும் ஒரு சில வாழ்வுக் கதைகளைச் சிந்திக்க முயல்வோம்.

'இறைவேண்டுதல்' அல்லது, 'செபித்தல்' என்ற வார்த்தைகளைக் கேட்டதும், நம்மிடம் முதலில் எழும் எண்ணங்கள்.... எதற்காக? யாருக்காக செபிப்பது?... நமக்காகவோ, பிறருக்காகவோ, ஒரு கருத்துக்காகவோ செபிப்பதை 'மன்றாட்டுச் செபம்' அல்லது, 'பரிந்துபேசும் செபம்' (Intercessory Prayer) என்றழைக்கிறோம். திருப்பலி நேரங்களில் நாம் எழுப்பும் பல செபங்கள் நமது தேவைகளை இறைவனிடம் எடுத்துச் சொல்லும் செபங்கள். குழுக்களாகக் கூடிச் செபிக்கும்போதும், நோயுற்றோருக்காக, குடும்ப அமைதிக்காக, நல்ல வேலை கிடைக்க, தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக... என்று பல தேவைகளை மனதில் ஏந்தி நாம் மன்றாட்டுக்களைச் சமர்ப்பிக்கிறோம்.

அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் வாழ்வில் நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி, பரிந்துபேசும் செபத்தின் அழகைப் பற்றி எடுத்துரைக்கிறது:
வட அமெரிக்க வரலாற்றில் மிகவும் கடினமான, சவால்கள் நிறைந்த ஐந்து ஆண்டுகள் (1861 - 1865) அரசுத்தலைவராகப் பணிபுரிந்து, அப்பணியிலேயே உயிரை நீத்தவர், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர், ஆபிரகாம் லிங்கன். அமெரிக்க வரலாற்றின் அவமானச் சின்னமாக விளங்கிய அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கென்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், அமேரிக்கா, வடக்கு, தெற்கு என்று பிளவுபட்டு, உள்நாட்டுப் போரில் மூழ்கியிருந்த காலம் அது.
ஒருநாள் அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கனைச் சந்திக்க ஓர் இறைபணியாளர் வந்தார். அவர் ஆபிரகாம் லிங்கனிடம், "நான் உங்களிடம் எவ்வித உதவியும் கேட்டு வரவில்லை... உங்களுக்கு ஓர் உறுதியை அளிக்கவே வந்துள்ளேன்" என்று அவர் ஆரம்பித்தார். பின்னர் அவர், "நீங்கள் மேற்கொண்டுள்ள உயர்ந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக எங்கள் மகன்களை போர்க்களத்திற்கு அனுப்பியுள்ளோம். மேலும், ஒவ்வொருநாளும் எங்கள் நம்பிக்கை, மற்றும் செபங்களை அளித்து வருகிறோம். வட மாநிலங்களில் வாழும் இளையோர் அனைவரின் பெற்றோரும் ஒவ்வொரு நாள் இரவிலும் முழந்தாள்படியிட்டு வேண்டுவதெல்லாம் இதுதான்: நீங்கள் முன்னின்று நடத்தும் இந்த அறப்போராட்டத்தில், இறைவன் உங்களுக்கு மன உறுதியையும், சக்தியையும் தரவேண்டும் என்பதே எங்கள் செபம்" என்று அந்த இறைபணியாளர் கூறினார்.
இதைக் கேட்டதும், கண்களில் கண்ணீர் போங்க, அந்த இறைப்பணியாளரின் கரங்களை உறுதியாகப் பற்றியபடி, "நீங்கள் பரிந்துபேசும் செபங்களை எனக்காக இறைவனிடம் எழுப்பாவிடில், நான் என்றோ என் உயரியக் கொள்கைகளிலிருந்து வீழ்ந்திருப்பேன். இப்போது நீங்கள் என்னைத் தேடி வந்து இவ்வாறு சொன்னபிறகு, நான் நடத்திவரும் போராட்டத்தில் இன்னும் உறுதியாக ஈடுபட எனக்குள் புது சக்தி பிறந்துள்ளதாக உணர்கிறேன்" என்று கூறினார் ஆபிரகாம் லிங்கன்.

"நான் செல்லக்கூடிய இடம் வேறெதுவும் இல்லை என்ற உணர்வு என்னை முழந்தாள்படியிட வைத்தது. எனது சொந்த அறிவும் என்னைச் சுற்றியுள்ள அனைத்து சக்திகளும் போதாதென்று அவ்வேளைகளில் உணர்ந்திருக்கிறேன்" என்று ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார். “I have been driven many times upon my knees by the overwhelming conviction that I had nowhere else to go. My own wisdom and that of all about me seemed insufficient for that day.” - Abraham Lincoln
எனவே, மற்றவர்கள் அவருக்காக முழந்தாள்படியிட்டு வேண்டுகின்றனர் என்பதைக் கேட்டதும், அவர் கண்களில் கண்ணீர் பொங்கியதில் வியப்பில்லையே!
இத்தகையோரைக் குறித்து, D.L.Moody என்ற புகழ்பெற்ற நற்செய்திப் பணியாளர் கூறிய சொற்கள் என் நினைவில் எழுகின்றன: "யார் அதிகம் முழந்தாள்படியிடுகிறாரோ, அவரால் வாழ்வில் நிமிர்ந்து நிற்க முடியும்." “He who kneels the most, stands the best.” - D.L. Moody
ஆபிரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வைச் சிந்திக்கும்போது, மனதில் ஓர் ஏக்கம் எழுகிறது... கறுப்பின மக்களை முன்னிறுத்தி, அவர்களின் உண்மையான விடுதலைக்காக உழைத்த ஆபிரகாம் லிங்கனைப் போன்ற தலைவர்களை இன்றைய உலகம் பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் அது... நமது ஏக்கத்தை இறைவனிடம் ஒரு மன்றாட்டாக எழுப்புவோம்.

முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா அவர்கள் செபத்தின்மீது கொண்டிருந்த நம்பிக்கையை இரு வாரங்களுக்கு முன் ஒரு நிகழ்வாகக் கேட்டோம். இறைவேண்டுதல் மீது அன்னை தெரேசா கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வு, Michael Scanlan என்பவர் எழுதியுள்ள 'Let the Fire Fall' 'தீ இறங்கி வரட்டும்' என்ற நூலில் பதிவாகியுள்ளது. அன்னை தெரேசாவுடன் இணைந்து, பிறரன்புப் பணியாளர்கள் என்ற ஆண்கள் துறவுப் பிரிவை உருவாக்கிய அருள் பணியாளர் Joseph Langford என்பவர் பகிர்ந்துகொண்ட உண்மைச் சம்பவம் இது:

கொல்கத்தாவில் அன்னை தெரேசா அவர்கள் நிறுவியிருந்த தலைமை இல்லத்தில் 300க்கும் அதிகமான நவத்துறவியர் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் காலையில் நகரின் பல பகுதிகளுக்குப் பணி புரியச் சென்றனர். ஒருநாள் அவர்கள் பணிகளுக்குச் சென்றபிறகு, அன்றைய உணவைத் தயார் செய்ய சமயலறைக்குச் சென்ற நவதுறவி ஒருவர், அன்னையிடம் பதட்டத்துடன் ஓடி வந்து, "அம்மா! இன்று மதிய உணவுக்கு, சப்பாத்தி தயாரிக்க மாவு சிறிதும் இல்லை" என்று கூறினார். அப்போது அன்னையின் அருகே அருள் பணியாளர் Langford நின்று கொண்டிருந்தார். இந்தப் பிரச்சனையைக் கேட்டதும், அன்னை தெரேசா, தனக்குத் தெரிந்த தாராள மனம் கொண்ட நிறுவனங்களுக்கு 'போன்' செய்து, நிலைமையைக் கூறி, அவர்களிடம் உதவிகள் கேட்பார் என்று அருள் பணியாளர் Langford காத்திருந்தார். அன்னை தெரேசா உதவி கேட்டார்... ஆனால், வேறு எந்த நிறுவனத்திடமும் அல்ல, இறைவனிடம்.
அன்னை, அந்த நவதுறவியிடம், "சகோதரியே, இந்த வாரம் சமையலறைக்கு நீங்கள்தானே பொறுப்பு? எனவே, நீங்கள் உடனடியாகக் கோவிலுக்குச் சென்று, நமக்கு உணவு ஏதும் இல்லை என்ற நிலையை இயேசுவிடம் சொல்லுங்கள்" என்று கூறியபடி, அருள் பணியாளர் Langford உடன் அவ்விடம் விட்டு அகன்றார். அச்சகோதரியும் கோவிலை நோக்கி நடந்தார்.
அவர்கள் அந்த இல்லத்தின் வாசலை அடைந்தபோது, அழைப்பு மணி அடித்தது. அன்னை அவர்கள் கதவைத் திறந்தார். அங்கு அன்னைக்கு முன்பின் அறிமுகம் ஏதும் இல்லாத ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் அன்னையிடம், "அன்னையே, இன்று நகரத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் துவக்கிவிட்டனர். இத்தகவல் எங்களுக்கு இப்போதுதான் கிடைத்தது. நாங்கள் ஏற்கனவே 7000 பேருக்கு மதிய உணவு தயார் செய்துவிட்டோம். ஆனால், பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதால், அந்த உணவை அவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை. இந்த உணவை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?" என்று அவர் அன்னையிடம் கேட்டார்.

'மன்றாட்டு செபம்' 'பரிந்துபேசும் செபம்' குறித்து புனித பவுல் அடியார் கூறும் வார்த்தைகள் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்கின்றன:
உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8: 26
தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்: ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது: தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.








All the contents on this site are copyrighted ©.