2013-07-15 15:48:07

திருத்தந்தையின் மூவேளை செப உரை


ஜூலை,15,2013. இறைவன் நம்மிடமிருந்து பலியை அல்ல, மாறாக இரக்கத்தையே எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்தவர்களாக நாம் ஒவ்வொருவரும் நல்ல சமாரியர்களாகச் செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமுக்கு வெளியே இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோ கோடைவிடுமுறை இல்லத்திலிருந்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் 'நல்ல சமாரியர்' உவமையை எடுத்துரைத்து விளக்கமளித்தார்.
குரு மற்றும் லேவியரைப்போல் அல்லாமல், இறைவிருப்பத்தைச் செயல்படுத்திக்காட்டி, நன்மைத்தனத்திற்கும் தாராளமனப்பான்மைக்கும் உதாரணமாக விளங்கிய நல்ல சமாரியரை நமக்கு எடுத்துக்காட்டாக வைக்கிறார் இயேசு, என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வித்தியாசமான மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததற்காகவே யூதர்களால் வெறுக்கப்பட்ட சமாரியரே, தற்போது இறைவிருப்பத்திற்கு இயைந்தவகையில் செயல்படுபவராக உள்ளார் எனவும் கூறினார் திருத்தந்தை.
அடுத்த வாரத்தில் தன் பங்கேற்புடன் இடம்பெறவிருக்கும் உலக இளையோர் தினக்கொண்டாட்டங்கள் குறித்தும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அதன் வெற்றிக்கென தனிப்பட்ட முறையில் செபிக்குமாறும் அங்கு குழுமியிருந்தோருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த மூவேளை செப உரையை வழங்குமுன்னர் காஸ்தல் கந்தோல்ஃபோ விடுமுறை இல்ல வளாகத்தில் குழுமியிருந்த மக்களையும் நேரடியாகச் சந்தித்தத் திருத்தந்தை, முன்னாள் திருத்தந்தையர்கள் இரண்டாம் ஜான் பால் மற்றும் 16ம் பெனடிக்ட் அவர்களையும் நினைவுகூர்ந்து, அவர்களின் சாட்சிய வாழ்வு இன்றைய மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், ஊக்கம் தருவதாகவும் இருப்பதாக எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.