2013-07-15 15:57:55

எய்ட்ஸ் விழிப்புணர்வுப்பணியில் தாய்வான் திரு அவை


ஜூலை,15,2013. எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தாய்வான் நாட்டின் சமூகக்குழுக்களும் திருஅவை அமைப்புகளும் மிகத் தீவிரப்பணிகளை மேற்கொண்டாலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்நோய் பரவுதல் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தாய்வான் அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று மடங்காகியுள்ளதாகக் கூறும் இவ்வறிக்கை, 20 முதல் 29 வயதுவரை உள்ளோரே இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
தாய்வானின் தலத்திரு அவை, கல்வி நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களுக்கு வழங்கி வருவதாக அந்நாட்டின் மறைக்கல்வி ஆசிரியர் மேத்யூ லீ எடுத்துரைத்தார்.
இளைய தலைமுறையினருக்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் வழி அவர்களின் நண்பர்களுக்கும் இந்நோயின் தீவிரம் குறித்து எடுத்துரைக்க தாய்வான் திருஅவை திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாக கூறினார், மாணவர்களிடையேப் பணியாற்றிவரும் அருள்பணியாளர் லூயிஸ் ஆல்ட்ரிக் (Louis Aldrich).
தாய்வான் நாட்டில் 1984க்கும் 2013க்கும் இடைப்பட்டக் காலத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 24 ஆயிரத்து 792ஐ எட்டியுள்ளதாகவும், இதில் 45.7 விழுக்காட்டினர் ஒரே பாலின நடவடிக்கைகள் மூலமும், 25.2 விழுக்காட்டினர் ஒரே போதை மருந்து ஊசியை பகிர்ந்துகொண்டதாலும் இந்நோய்க்கிருமிகளைப் பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : Asia News








All the contents on this site are copyrighted ©.