2013-07-13 16:09:56

கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சனைகள் கவனத்தில் எடுக்கப்படுமாறு திருப்பீடம் அழைப்பு


ஜூலை,13,2013. கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள இலட்சக்கணக்கான பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கவனத்தில் எடுக்கப்படுமாறு திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அவை கேட்டுள்ளது.
கடல்கொள்ளையர், சட்டத்துக்குப் புறம்பே மீன்பிடிப்பதால் ஏற்படும் சேதம், பணியில் இருக்கும்போதே தாங்கள் வேலைசெய்யும் கப்பல்களில் கைவிடப்படும்நிலை, கரைக்குச் செல்வதற்கான கப்பல்பணிக்குழுவின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படல் உட்பட கடல் பணியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் இத்திருப்பீட அவை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆண்டுதோறும் ஜூலை மாதம் இரண்டாம் ஞாயிறன்று கடல் ஞாயிறு கடைப்பிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள இத்திருப்பீட அவை, கடல் பணியாளர்களுக்கு உலகின் 260க்கும் மேற்பட்ட துறைமுகங்களில் 90 ஆண்டுகளுக்கு மேலாக கத்தோலிக்கத் திருஅவை தொடர்ந்து செய்துவரும் ஆன்மீக மற்றும் பிற சேவைகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.
ஏறக்குறைய ஒரு இலட்சம் கப்பல்களில் 12 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலான பணியாளர்கள், இவ்வுலகின் 90 விழுக்காட்டு உற்பத்திப் பொருள்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதையும் இத்திருப்பீட அவை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அனைத்துலக தொழில் நிறுவனத்தின் 2006ம் ஆண்டின் கடல்தொழில் ஒப்பந்தம் இவ்வாண்டு ஆகஸ்டில் அமலுக்கு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள இத்திருப்பீட அவையின் செய்தி, இந்த ஒப்பந்தத்திற்கு நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி, இப்பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அகற்றுமாறு கேட்டுள்ளது.
ஜூலை 14, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் கடல் ஞாயிறுக்கென, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அவை வெளியிட்டுள்ள செய்தியில், அவ்வவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அதன் செயலர் ஆயர் Joseph Kalathiparambil ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும், கடல்பணியாளர்களுக்கு 1920ம் ஆண்டுமுதல் மேய்ப்புப்பணிகளைச் செய்து வருகின்றது திருப்பீடம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.