2013-07-13 16:17:35

இந்திய மாணவிக்கு முதல் மலாலா விருது


ஜூலை,13,2013. சிறுமிகளின் கல்விக்காக ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்துள்ள முதல் மலாலா விருது இந்தியாவை சேர்ந்த 15 வயது மாணவி ரசியா சுல்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட்டை சேர்ந்த ரசியா சுல்தான் என்ற மாணவி, 48 பெண் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, பள்ளியில் சேர்த்ததற்காக அம்மாணவிக்கு இவ்விருதை வழங்கியுள்ளது ஐ.நா.நிறுவனம்.
பாகிஸ்தானில் பெண் கல்விக்கு எதிராகத் தலிபான்கள் நடத்திய தாக்குதல்களுக்குப் பயப்படாமல் சிறுமிகளின் கல்விக்காக உழைத்துவந்தவர் மலாலா யூசப்சாய்.
மலாலா கடந்த ஆண்டு அக்டோபரில் தலிபான்களால் சுடப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் பாகிஸ்தானிலும், பிரிட்டனிலும் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார்.
மலாலாவின் 16வது பிறந்த நாளையொட்டி இவ்வெள்ளியன்று மலாலா விருதை வழங்கியது ஐ.நா. நிறுவனம். அந்நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திலும் உரையாற்றினார் 16 வயதுச் சிறுமி மலாலா.
தீவிரவாதிகளுக்கு எதிரான உறுதியான ஆயுதம் கல்வி மட்டுமே எனவும், ஒரு குழந்தைக்கு, ஓர் ஆசிரியர், ஒரு பேனா இருந்தால் உலகையே மாற்றிவிடலாம் எனவும் மலாலா நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பெண் கல்விக்கு எதிரான தலிபான்கள் நடத்திய தாக்குதலைச் சந்தித்த மலாலாவைப் பெருமைப்படுத்தும் விதமாக மலாலாவின் பிறந்த நாளாகிய ஜூலை 12ம் தேதியை மலாலா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.
வரும் காலங்களில் மலாலாவின் அனைத்துச் சமுதாய கல்விப் பணிகளுக்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினகரன்/UN







All the contents on this site are copyrighted ©.