2013-07-12 15:21:03

யுனெஸ்கோ : போர்ப் பகுதிகளில் வாழும் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய சிறாரின் எண்ணிக்கை அதிகரிப்பு


ஜூலை,12,2013. உலகில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் 5 கோடியே 70 இலட்சம் பேரில் பாதிப்பேர் சண்டையினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர் என்று யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்ட ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகின்றது.
கடந்த ஆண்டு அக்டோபரில் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் தலிபான்களால் சுடப்பட்ட Malala Yousafzai என்ற பாகிஸ்தான் சிறுமியின் 16வது பிறந்தநாளையொட்டி, யுனெஸ்கோவும், பிரிட்டனின் Save the Children பிறரன்பு நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.
உலக அளவில் 2008ம் ஆண்டில் 6 கோடியாக இருந்த பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சிறாரின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டில் 5 கோடியே 70 இலட்சமாகக் குறைந்துள்ளது எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.
எனினும், சண்டையினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கல்வியறிவின்றி இருக்கும் ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் வயதுடைய ஏறக்குறைய மூன்று கோடிச் சிறாருக்கு கல்வி வழங்கப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறும் அவ்வறிக்கை பரிந்துரைக்கின்றது.
சிறுமி Malala Yousafzaiயின் 16வது பிறந்தநாள் ஜூலை 12, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.