2013-07-11 16:00:23

ரியோ டி ஜெனீரோவில் "ஆண்டவரின் அடிச்சுவடுகளில்" கண்காட்சி


ஜூலை,11,2013. "ஆண்டவரின் அடிச்சுவடுகளில்" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கண்காட்சி, ஜூலை 9, இச்செவ்வாயன்று ரியோ டி ஜெனீரோ நகரில் அமைந்துள்ள தேசிய அருங்கலை மையத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பொது நிலையினர் பணிகளுக்கான திருப்பீட அவையின் ஓர் அங்கமாகிய இரண்டாம் ஜான் பால் இளையோர் அறக்கட்டளையால், உலக இளையோர் நாளுக்கென உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி ஜூலை 9ம் தேதி முதல் அக்டோபர் 12ம் தேதி முடிய இந்த மையத்தில் நடைபெறும்.
Beato Angelico, Melozzo da Forli, Leonardo da Vinci, Bernini, போன்ற உலகப் புகழ்பெற்ற பல கலைஞர்களின் படைப்புக்களை உள்ளடக்கிய இந்தக் கண்காட்சி, கிறிஸ்துவின் வாழ்வு, பாடுகள், உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகளையும், 'கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்லும் வழி - மரியா' என்ற கருத்தில் அமைந்துள்ள ஓவியங்களையும் உள்ளடக்கியது.
கத்தோலிக்கத் திருஅவை வளர்ந்து வந்துள்ள ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் உரிய கலைப்படைப்புக்கள் நான்கு பகுதிகளாக இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு அறிவித்துள்ளது.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.