2013-07-11 15:59:14

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘Motu Proprio’ அறிக்கை குறித்த பேராயர் மம்பெர்த்தி அவர்களின் விளக்கம்


ஜூலை,11,2013. குற்றங்களுக்கு எதிராக திருப்பீடம் மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளை தெளிவுபடுத்தும் திருத்தந்தையின் ‘Motu Proprio’ அறிக்கையைக் குறித்து இவ்வியாழனன்று திருப்பீடத்தின் வெளியுறவுத் துறை செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
திருப்பீடம், வத்திக்கான் நாடு ஆகிய பிரிவுகளில் குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய முயற்சிகளை 2010ம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மேற்கொண்டார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள இந்த அறிக்கை இந்த முயற்சிகளின் தொடர்ச்சி என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக 1949ம் ஆண்டு ஜெனீவாவில் வெளியிடப்பட்ட நான்கு முடிவுகள், இன வேறுபாடுகளை ஒழிக்க 1965ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவுகள், சித்ரவதை மற்றும் மனித மாண்பைக் குலைக்கும் குற்றங்களுக்கு எதிராக 1984ம் ஆண்டு வெளியிடப்பட்ட முடிவுகள், மற்றும் குழந்தைகளுக்கும், சிறாருக்கும் எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள முடிவுகள் என்று, உலக அரங்கில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து சட்டங்களையும் வத்திக்கான் நாடும், திருப்பீடமும் பின்பற்றும் என்பதைத் திருத்தந்தையின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இதேபோல், குறிப்பட்ட ஓர் இனத்தை அழிக்கும் முயற்சிகள், இனவெறி ஆகிய குற்றங்களுக்கும் எதிராக உலக நாடுகள் விதித்துள்ள தண்டனைகளை வத்திக்கானும் பின்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.