2013-07-10 15:44:47

பிலிப்பின்ஸ் பேராயர் : வாழ்வைப் பாதுகாப்பது ஒவ்வொரு கத்தோலிக்கரின் தலையாயக் கடமை


ஜூலை,10,2013. வாழ்வைப் பாதுகாப்பது ஒவ்வொரு கத்தோலிக்கரின் தலையாயக் கடமை என்பதால், வாழ்வுக்கு எதிராக பிலிப்பின்ஸ் அரசு உருவாக்கிவரும் சட்டத்தை வன்மையாக எதிர்க்கும் கடமை அனைவருக்கும் உண்டு என்று பிலிப்பின்ஸ் பேராயர் ஒருவர் கூறினார்.
கருத்தடை மற்றும் கருக்கலைப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய சட்டம் ஒன்றை பிலிப்பின்ஸ் அரசு அண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ளதை அடுத்து, மக்களில் பலர் இச்சட்டத்தை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தை அணுகியுள்ளனர்.
இந்த வழக்கு இச்செவ்வாயன்று விசாரணைக்கு வந்துள்ள வேளையில், கத்தோலிக்கர்களின் சார்பில் வாதாடச் செல்லும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட திருப்பலியை ஆற்றிய பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Socrates Villegas அவர்கள், மனசாட்சிக்கு எதிராகச் செல்லும் அனைத்து முயற்சிகளையும் திருஅவை எதிர்க்கும் என்று கூறினார்.
14 ஆண்டுகளாக பிலிப்பின்ஸ் நாட்டின் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட கருத்தடைச் சட்டம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சட்டமானது.
இச்சட்டத்தை எதிர்த்து, கத்தோலிக்கர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர் என்றும், வழக்கு விசாரணையில் தகுந்த முடிவு இல்லையெனில், இம்மாதம் 26ம் தேதி வழக்கு தொடரும் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : Fides / AsiaNews








All the contents on this site are copyrighted ©.