2013-07-10 15:40:39

கனடா இரயில் விபத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் ஆழ்ந்த வருத்தம்


ஜூலை,10,2013. கனடா நாட்டின் Lac-Mégantic எனும் ஊரில் நிகழ்ந்த இரயில் விபத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
இவ்விபத்தில் இறந்தோருக்கு தன் செபங்களை உறுதி செய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் ஆறுதலையும், துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டிருப்போருக்குத் தன் நன்றி கலந்த செபங்களையும் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே அவர்கள், கனடா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ரிச்சர்ட் ஸ்மித் அவர்களுக்கு இத்தந்தியை அனுப்பியுள்ளார்.
எரிபொருளுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் நிறைக்கப்பட்ட 72 வாகனங்கள் கொண்ட ஒரு இரயில் தொடர், ஜூலை 5, கடந்த வெள்ளி இரவு, ஓட்டுனர் யாரும் இன்றி தானாகவே இரண்டு மணி நேரம் ஓடி, பின்னர் தடம் புரண்டதில், வாகனங்கள் வெடித்து, இரயில் பாதையைச் சுற்றிலும் பெரும் அழிவை ஏற்படுத்தின.
இவ்விபத்தில் 13 பேர் இறந்துள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ள வேளை, இன்னும் 50க்கும் மேற்பட்டோரின் நிலை உறுதி செய்யப்படாமல் உள்ளது. இவர்களில் பலர் இந்தத் தீப்பிழம்பில் எரிந்து சாம்பலாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.