2013-07-09 15:40:09

புலம் பெயர்ந்த மக்களுக்குப் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும், அனைத்துலக காரித்தாஸ் தலைவர்


ஜூலை,09,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லாம்பெதூசா தீவுக்குச் சென்றது, உலகில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இலட்சக்கணக்கான அகதிகளை நினைவுபடுத்துவதாய் இருக்கின்றது என்று அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிகெஸ் மாராதியாகா கூறினார்.
இன்று உலகில் நான்கு கோடிக்கு மேற்பட்ட மக்கள், நாடுகளுக்குள்ளே புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் நாடுகளின்றி வாழ்பவர்கள் என்றுரைத்த கர்தினால் மாராதியாகா, உலகில் புலம் பெயர்ந்த மக்களுக்குப் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் கேட்டுக்கொண்டார்.
வியன்னாவிலுள்ள அரசர் அப்துல்லா அனைத்துலக பல்சமய மையத்தில் இவ்வாண்டு நவம்பரில் இடம்பெறவுள்ள அமைதிக்கான மதங்கள் கருத்தரங்கில் 400க்கு மேற்பட்ட சமயத் தலைவர்கள், அகதிகளை வரவேற்பதில் மதங்களின் பங்கு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளனர்.
அகதிகளையும் புலம் பெயர்ந்த மக்களையும், குடியுரிமை இல்லாமல் இருப்பவர்களையும் வரவேற்கும் வழிமுறைகளை வலியுறுத்தவுள்ள இவ்வறிக்கை இனங்களிடையே புரிந்து கொள்ளுதலையும், சகிப்புத்தன்மையையும் வளர்த்து, இனவெறிக்கு எதிராகப் போராடும் நோக்கத்தையும் கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.