2013-07-09 15:42:47

புத்த கயா தொடர் குண்டு வெடிப்புக்களுக்கு தெற்கு ஆசிய ஆயர்கள் கண்டனம்


ஜூலை,09,2013. இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள புத்த கயாவில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களுக்கு எதிரான தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் தெற்கு ஆசிய ஆயர்கள்.
வன்முறையைத் தூண்டிவிடும் பிரிவினைவாதம் மற்றும் பாகுபாட்டுணர்வையும் கண்டித்துள்ள ஆயர்கள், இந்தியாவில் பல்சமய நல்லிணக்கமும் நீதியும் இடம்பெறவும், குறிப்பாக, ஏழைகள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படவும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இவ்வன்முறையை வன்மையாய்க் கண்டித்துள்ள பாட்னா பேராயர் வில்லியம் டி சூசா, அமைதியின் இருப்பிடமான, மிகவும் புனிதமான இந்தப் புத்தமத திருத்தலம், தொடர் குண்டு வெடிப்புக்களுக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இவ்வன்முறை, பீகார் மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் நோக்கத்தில் சில சமூக விரோதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகத் தெரிகின்றது என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு அப்பகுதியில் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கம் இடம்பெறுவதற்கு ஆவன செய்யுமாறும் கேட்டுள்ளார் பேராயர் டி சூசா.
புத்தர் ஞானம் பெற்ற இடமான இந்தப் புத்தமதத் திருத்தலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கடந்த ஞாயிறு அதிகாலையில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், இரண்டு புத்தத் துறவிகள் படுகாயம் அடைந்தனர். அத்துடன் நாடு முழுவதும் உள்ள, புத்த வழிபாட்டுத் தலங்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.