2013-07-09 16:50:02

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் உவமை - பகுதி 4


RealAudioMP3 அவ்வப்போது மின்னஞ்சல் வழியே என் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளும் கதைகளில் ஒரு சில, ஆழமான பாதிப்புக்களை எனக்குள் உருவாக்கும். அடிக்கடி என் நினைவில் அக்கதைகள் வந்து செல்லும். இத்தகைய தாக்கத்தை உருவாக்கிய ஒரு கதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இக்கதையின் தலைப்பே நம் கவனத்தை ஈர்க்கும். ‘செபத்தின் எடை’ (The Weight of Prayer) என்பதே இக்கதையின் தலைப்பு.

மளிகைக்கடை ஒன்றில் நடப்பதாக இக்கதை கூறப்பட்டுள்ளது. மளிகைக்கடை முதலாளியிடம் ஓர் ஏழைப்பெண் வந்து, தன் குடும்பத்திற்கு அன்றிரவு மட்டும் உணவு செய்யத் தேவையான பொருள்களைக் கடனாகத் தரும்படி கெஞ்சினார். அப்பெண்ணின் கணவர் உடல்நலமின்றி, வேலைக்குப் போக முடியாமல் இருந்தார். அவர்களுக்கு ஏழு குழந்தைகள். அவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக பட்டினியால் தவித்தனர். உதவி கேட்ட அப்பெண்ணை அவ்விடத்தைவிட்டு துரத்திக் கொண்டிருந்தார் கடை முதலாளி.
கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்த வந்த ஒருவர், இந்தக் காட்சியைக் கண்டு மனமிரங்கி, அந்த முதலாளியிடம், "அந்தப் பெண்ணுக்குத் தேவையானதைக் கொடுங்கள். நான் அதற்குரிய பணத்தைத் தருகிறேன்" என்று சொன்னார். முதலாளி சலிப்புடன் அந்தப் பெண்ணிடம், "சரி, உனக்குத் தேவையான பொருள்களை இந்தக் காகிதத்தில் எழுதி, தராசில் வை. அந்தக் காகிதத்திற்கு ஈடான எடைக்கு நான் பொருள்களைத் தருகிறேன்" என்று ஏளனமாகச் சொன்னபடி, அப்பெண்ணிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். காகிதத்தைப் பெற்றுக்கொண்ட அப்பெண், ஒரு நிமிடம் கண்களை மூடி செபித்தார். பின்னர், அந்தக் காகிதத்தில் வேகமாக எழுதி, தராசில் அக்காகிதத் துண்டை வைத்தார். காகிதம் வைக்கப்பட்ட தராசுத்தட்டு கீழிறங்கியது. இதைப் பார்த்த முதலாளிக்கு அதிர்ச்சியாக இருந்தது. உதவி செய்ய வந்திருந்தவரும் இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

"சரி, உனக்குத் தேவையானப் பொருள்களை மற்றொரு தட்டில் வை" என்று எரிச்சலுடன் சொன்னார் முதலாளி. தனக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், ஆகியவற்றை அந்தப் பெண் அடுத்தத் தட்டில் வைத்தார். அவர் எவ்வளவு வைத்தாலும், காகிதம் வைத்திருந்த தட்டு மேலே எழவில்லை. அந்தப் பெண் தராசில் வைத்த பொருள்களைக் கட்டி, வேண்டா வெறுப்பாக அவரிடம் கொடுத்தார் முதலாளி. அருகில் இருந்தவர், ‘தான் கண்ட இப்புதுமைக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்’ என்று சொல்லியபடியே, மகிழ்ச்சியுடன் அதற்கு உரிய பணத்தையும் கொடுத்தார். அந்த ஏழைப்பெண் சென்றபின், கடை முதலாளி தராசை சோதித்தபோது, அது பழுதடைந்து விட்டதென்பதைப் புரிந்துகொண்டார். பின்னர், அந்த ஏழைப்பெண் தராசில் வைத்த காகிதத் துண்டை எடுத்துப் பார்த்தார், முதலாளி. அந்தக் காகிதத்தில், பொருள்களின் பட்டியல் எதுவும் எழுதப்படவில்லை. மாறாக, அப்பெண் காகிதத்தில் ஒரு சிறு செபத்தை எழுதியிருந்தார். "இறைவா, எங்கள் தேவை என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள் தேவையை நிறைவு செய்தருளும்" என்பதே அந்தச் செபம்.

மளிகைக்கடை முதலாளி இரக்ககுணம் ஏதுமின்றி நடந்துகொள்கிறார். அதுமட்டுமல்ல, வேறொருவர் அப்பெண்ணுக்கு உதவி செய்வதாகக் கூறியபிறகும், அவர் அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்தும்படி ஏளனம் செய்கிறார். தன் தேவைகளைக் காகிதத்தில் எழுதுவதற்கு முன், அந்தப் பெண் கண்மூடிச் செபித்தபோது, கடை முதலாளி அப்பெண்ணின் கடவுள் நம்பிக்கையைக் கண்டு எள்ளி நகைத்திருப்பார். இந்தக் காட்சியைச் சிந்திக்கும்போது, லூக்கா நற்செய்தி 18ம் பிரிவில் இயேசு குறிப்பிடும் நேர்மையற்ற நடுவர் நினைவுக்கு வருகிறார். இறை அச்சமோ, மக்கள் மீது மதிப்போ இல்லாமல் வாழும் இந்த நடுவர், ஏழை கைம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை வேடிக்கைப் பார்த்துவந்தார் என்பதை உணர்கிறோம். தன்னை நாடி வரும் ஏழைகளுக்கு உதவி செய்யாமல், அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மகிழும் வக்கிர எண்ணங்கள் கொண்ட மக்களை நாம் அவ்வப்போது சந்திக்கத்தான் செய்கிறோம்.

கைம்பெண் தன்னிடம் எழுப்பிவந்த செபத்தின் எடையையோ, வலிமையையோ உணராமல் காலம் தாழ்த்தி வந்த நடுவர், அக்கைம்பெண்ணின் தொடர்ந்த முயற்சியைக் கண்டு அஞ்சியதாக இயேசு உவமையில் குறிப்பிடுகிறார். அவரது அச்சத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக நடுவர் தனக்குள் சொல்லிக்கொண்ட வார்த்தைகள் இதோ: நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்.”
(லூக்கா 18 4-5)

‘செபத்தின் எடை’ என்ற இக்கதையை நான் வாசித்தபோது, என் மனதில் ஆழமான எண்ணங்களை உருவாக்கிய பகுதி, அந்தக் காகிதம் வைக்கப்பட்டத் தராசுத் தட்டு கீழிறங்கி நின்றதும், கடை முதலாளி அதிர்ச்சியில் உறைந்துபோனதும்... காற்றில் பறக்கும் அளவுக்கு கனமற்ற காகிதம், கனமான உலோகத்தால் ஆன தராசையும் கட்டி வைக்கும் திறன் பெறுகிறது. எதனால்? அப்பெண் காகிதத்தில் பதித்த செபத்தால்... கடவுளின் கருணையால். ‘செபத்தின் எடை’ என்ன? அது வெளியாகும் மனதில் உள்ள பாரத்தைப் பொறுத்து செபத்தின் எடையும் கூடும்.

கதையில் வந்த இந்தக் காட்சி என் மனதில் பிற எண்ணங்களை வளர்த்தது. அவற்றில் ஒன்று... தண்ணீர். இடைவிடாது, மனம் தளராது செபிக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்க இயேசு கூறிய இவ்விரு உவமைகளையும் சிந்தித்தபோது, ‘எறும்பு ஊர கல்லும் தேயும்’ என்ற பழமொழியை எண்ணிப் பார்த்தோம். பார்வைக்கு வலுவற்றதுபோல் தெரியும் எறும்பு, தன் தொடர் முயற்சியால் கல்லிலும் தடம் பதிக்கும் என்று கூறினோம். அதேபோல், பார்ப்பதற்கு மிக மிருதுவாக, எவ்வித வலிமையையும் வெளிப்படுத்தாத தண்ணீரும், பல மாற்றங்களை உருவாக்கும்.

தண்ணீரைப்பற்றி Lao Tzu என்ற ஞானி எழுதிச் சென்றுள்ள சில வரிகளை ஒரு சிறு தியானமாக மேற்கொள்வோம்.
தண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள் எண்ணற்றவை, ஆழமானவை.
அலைகளெனும் தூரிகையால் உலகக் கண்டங்களின் எல்லைகளை ஒவ்வொரு நாளும் மாற்றி வரைவது தண்ணீர்தானே.
தண்ணீர் மிகவும் மென்மையானது; ஆனால், அனைத்தையும் வெல்வது.
தண்ணீர் நெருப்பை அணைத்துவிடும். அணைக்க முடியாத வண்ணம் எரியும் நெருப்பிலிருந்து தண்ணீர் தப்பித்துச் செல்லும் நீராவியாக. தப்பித்த நீராவி மீண்டும் சேர்ந்துவிடும் மேகமாக. மீண்டும் மழையாக உலகை அடையும்.
மென்மையான மணலை அடித்துச் செல்லும் தண்ணீர், பாறைகளுக்கு முன் பணிந்து விடும். பாறைகளைச் சுற்றி ஓடிவிடும்.
பாறைகளுக்கு முன் பணிந்து விடும் அதே தண்ணீர், இரும்புக்குள் ஈரமாய்ப் புகுந்து, இரும்பைத் துருவாக்கி, தூளாக்கிவிடும்.
விண்வெளியில் தண்ணீர் துளிகளாய் நிறைந்து, வீசும் காற்றையும் நிறுத்தி, வான் வெளியை மௌனமாக்கி விடும்.
எந்த ஒரு தடை வந்தாலும் சமாளித்து ஓடும் தண்ணீர் கடலை அடைவது உறுதி.
தண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள் எண்ணற்றவை, ஆழமானவை.

இரும்பு மனது கொண்ட நடுவரை, தன் கண்ணீரால், வேண்டுதலால் மாற்றிய கைம்பெண் என்ற இந்த உவமையால் எத்தனையோ கோடான கோடி எளிய உள்ளங்கள் தொடர் வேண்டுதலில் நம்பிக்கை கொண்டு வாழ்கின்றனர் என்பதை நாம் அறிவோம். தொடர் வேண்டுதலின் வலிமையைக் கூறும் ஒரு கதையுடன் நாம் இந்த உவமையின் தேடலை நிறைவு செய்வோம்.

Dr. Ahmed தலைசிறந்த மருத்துவர். பல ஆண்டுகள் அவர் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியதால், அகில உலக மருத்துவர் கழகம் அவருக்கு விருது ஒன்றை அறிவித்தது. பக்கத்து நாட்டில் நடைபெறும் அகில உலக கருத்தரங்கில் அவ்விருதை வழங்க, இக்கழகம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
விருது நாளன்று காலை அவர் தன் நாட்டிலிருந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டார். ஒரு சில மணி நேரத்தில் விமானத்தில் பிரச்சனை ஒன்று உருவானதால், அருகிலிருந்த ஓர் ஊரில் விமானம் தரையிறக்கப்பட்டது. அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, தன் மாநாட்டைப் பற்றிக் கூறி, எப்படியாவது அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கேட்டார்.
அந்த விழாவின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்தாலும், அடுத்த 10 மணி நேரத்திற்கு வேறு விமானங்கள் அவ்வழியே செல்லாது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இருந்தாலும், Dr. Ahmed ஒரு வாடகைக் காரில் அந்த ஊருக்குச் செல்லலாம் என்றும், அதற்கு நான்கு மணி நேரங்களே எடுக்கும் என்றும் குறிப்பிட்டனர்.

வேறு வழியின்றி, Dr. Ahmed வாடகைக் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு புறப்பட்டார். வழியில், திடீரென, எவ்வித முன்னறிவுப்பும் இல்லாமல், புயல் ஒன்று உருவானது. கனமழை பெய்ததால், அவர் செல்லவேண்டிய பாதையைத் தவறவிட்டார். அந்தப் பாதையில் இரண்டு மணி நேரங்கள் ஒட்டியபின், களைப்பாலும், பசியாலும் சாலையின் ஓரமாக காரை நிறுத்தினார். அருகில் ஏதாவது தொலைபேசி வசதி இருந்தால், விருது விழாவை ஏற்பாடு செய்தவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று எண்ணினார்.
பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அங்கு சென்று கதவைத் தட்டினார். வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். அங்கு தொலைபேசி ஏதும் உண்டா என்று டாக்டர் கேட்டதற்கு, தன்னிடம் அந்த வசதி இல்லை என்று கூறிய அப்பெண், Dr. Ahmed இருந்த நிலையைக் கண்டு, உள்ளே வந்து ஏதாவது சூடாகக் குடியுங்கள் என்று அழைத்தார்.
அந்த அழைப்பை ஏற்று, டாக்டர் உள்ளே சென்றார். அவருக்கு வேண்டிய உணவையும், தேநீரையும் பரிமாறிய அந்தப் பெண், தான் துவங்கிய செபத்தை முடித்துவிட்டு வருவதாகக் கூறி, அருகிலிருந்த ஒரு தொட்டில் அருகில், முழந்தாள் படியிட்டு தன் செபத்தைத் தொடர்ந்தார்.
மனம் உருகி, கண்ணீருடன் அவர் செபித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர், அவருக்கு உதவி செய்ய எண்ணினார். அவர் செபத்தை முடித்துவிட்டு வந்ததும், அவரது கண்ணீருக்கும், செபத்திற்கும் காரணம் கேட்டார். அந்த வயதானப் பெண், "இறைவன் என் வேண்டுதல்கள் அனைத்திற்கும் பதில் வழங்கியுள்ளார். ஒரே ஒரு செபத்திற்கு மட்டும் இறைவன் இன்னும் பதில் தரவில்லை" என்று கூறினார்.
அந்த செபம் என்ன, அந்தத் தொட்டிலில் இருப்பது யார் என்று கேள்விகள் எழுப்பிய டாக்டரிடம், அவர் விவரங்கள் சொன்னார்: "தொட்டிலில் உறங்குவது என் பேரக்குழந்தை. அவனுடைய பெற்றோர் இருவரும் அண்மையில் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். என் பேரனுக்கு வினோதமான ஒரு புற்றுநோய் உள்ளது. அந்தப் புற்றுநோயைக் குணமாக்கும் திறமை கொண்டவர் பக்கத்து நாட்டில் உள்ள ஒரே ஒரு மருத்துவர். அவர் பெயர் டாக்டர் அஹ்மத் என்பது மட்டும் தெரியும். அவரைச் சென்று பார்க்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. அதனால், இறைவனிடம் நான் தினமும் வேண்டுவது இதுதான்... இறைவா, அந்த டாக்டரிடம் எப்படியாவது எங்களைக் கொண்டு சேர்த்துவிடு என்பது ஒன்றே நான் தொடர்ந்து எழுப்பும் வேண்டுதல்" என்று கூறி முடித்தார் அந்தப் பெண்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் அஹ்மத் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் தன் கதையைச் சொன்னார்... தான் விருது வாங்கப் புறப்பட்டது, விமானம் பழுதடைந்தது, புயலால் தான் வழியைத் தவறவிட்டது, அந்த இல்லத்தின் கதவைத் தட்டியது என்று, அன்று காலை முதல் தனக்கு நிகழ்ந்ததையெல்லாம் கூறிய டாக்டர் அஹ்மத், அந்தப் பெண்ணிடம், "நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் டாக்டர் அஹ்மத் நான்தான்" என்று கூறினார்.

தொடர் வேண்டுதலின் வலிமையை உணர்த்தும் 'நேரமையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' உவமையை நமக்குச் சொல்லித்தந்த இறைமகன் இயேசுவுக்கும், அதை, தன் நற்செய்தியில் மட்டுமே பதிவுசெய்து, ஈராயிரம் ஆண்டளவாய் பல கோடி உள்ளங்களில் செபத்தின் மீது நம்பிக்கையை வளர்த்துவரும் நற்செய்தியாளர் லூக்காவுக்கும் நன்றி கூறுவோம்.








All the contents on this site are copyrighted ©.