2013-07-09 15:38:29

28வது அனைத்துலக இளையோர் தினம் குறித்து கர்தினால் Rylko


ஜூலை,09,2013. ரியோ டி ஜெனிரோவில் இம்மாதம் 22 முதல் 28 வரை இடம்பெறவிருக்கும் 28வது அனைத்துலக இளையோர் தினம், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலத்தீன் அமெரிக்காவில் நடைபெறவிருக்கின்றது என்று திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Stanisław Rylko கூறினார்.
விரைவில் தொடங்கவுள்ள 28வது அனைத்துலக இளையோர் தினம் குறித்த சிந்தனைகளை வத்திக்கான் வானொலியில் பகிர்ந்து கொண்ட கர்தினால் Rylko, உரோமைக்கு வெளியே முதன்முதலாக அர்ஜென்டினாவின் Buenos Airesல் 1987ம் ஆண்டு இவ்வனைத்துலக இளையோர் தினம் நடைபெற்றது என்று கூறினார்.
இளையோர் திருத்தந்தை மீதும், திருஅவை மீதும் எவ்வளவு அன்பு கொண்டுள்ளனர் என்பதையும், இவர்களின் மறைப்பணி ஆர்வத்தையும், விசுவாசத்தின்மீது இவர்கள் கொண்டுள்ள மகிழ்ச்சியையும் இந்த அனைத்துலக இளையோர் தின நிகழ்வுகள் காட்டுகின்றன எனவும் கர்தினால் Rylko கூறினார்.
“நீங்கள் போய் எல்லா மக்கள் இனத்தாரையும் சீடராக்குங்கள்” (மத்.28,19) என்பது 28வது அனைத்துலக இளையோர் தினத்தின் கருப்பொருளாகும்.
இவ்விளையோர் தினத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.