2013-07-08 17:06:40

திருத்தந்தை : நற்செய்தி அறிவிப்புப்பணிபுரிவோர்க்கு செபம் முக்கியத்துவம் வாய்ந்தது


ஜூலை,08,2013. கடந்தவாரம் வியாழன் முதல் நான்கு நாள் ஆன்மீகத் தயாரிப்பு நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இளங்குருத்துவ மற்றும் நவத்துறவியர்களுக்கு இஞ்ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
66 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ ஆறாயிரம் குருத்துவ மாணவர்கள், நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோருக்கு இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், ஆறுதல்வழி கிட்டும் மகிழ்வு, இயேசுவின் சிலுவை, செபம் ஆகிய மூன்று தலைப்புகளில் தன் கருத்துக்களை முன்வைத்தார்.
மகிழ்ச்சியை நமக்குத் தரவல்ல இறைவனின் ஆறுதல் குறித்த வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார் திருத்தந்தை.
ஒருதாய் தன் மகவைக்கு ஆறுதல் அளிப்பதுபோல் நம் இறைவன் நமக்கு ஆறுதல் அளிப்பார் என்பதை அறிந்துள்ள நாம், அந்த ஆறுதலையும் அதன்வழி கிட்டும் மகிழ்வையும் முதலில் அனுபவிக்கும்போதுதான் அதனைப் பிறருக்கும் அறிவிக்க முடியும் என்றார்.
இயேசுவின் சிலுவைத் துன்பங்களில் நாம் பங்குகொண்டால்தான், அவரின் உயிர்ப்பிலும் நாம் பங்குகொள்ள முடியும் என்பதையும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
அறுவடைக்குத் தேவையானஆட்களை அனுப்புமாறு அறுவடையின் ஆண்டவரை நோக்கிச் செபிப்போம் எனநாம் நற்செய்தியில் வாசிப்பதை தன் மறையுரையில் நினைவூட்டியதிருத்தந்தை, நற்செய்தி அறிவிப்புப்பணிபுரிவோருக்கு செபம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் வலியுறுத்தினார்.
நம்பிக்கை ஆண்டின் ஒரு பகுதியாக, குருத்துவ மாணவர்கள், நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோருக்கு உரோமையில் கடந்த வியாழன் முதல் ஞாயிறு வரை, கூட்டங்கள், திருநற்கருணை ஆராதனை, ஒப்புரவு திருவருட்சாதனங்கள் மற்றும் பிற நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.