2013-07-08 16:52:23

உலகளாவிய பொருளாதாரக் கொள்கையின் பாராமுகம் குறித்து திருத்தந்தை கண்டனம்


ஜூலை,08,2013. நல்லதோர் வாழ்வைத் தேடிவரும் குடியேற்றதாரர்களுள் பலரின் உயிரிழப்புகள் போன்ற பெருவிபத்துகளுக்கு இட்டுச்செல்லும் உலகளாவிய பொருளாதாரக் கொள்கையின் பாராமுகம் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐரோப்பாவின் தென்முனையிலுள்ள, இத்தாலியின் லாம்பெதூசா தீவில் அடைக்கலம் தேடியுள்ள குடியேற்றதாரரையும், இவர்களுக்கு உதவி செய்யும் அத்தீவின் மக்களையும் சந்தித்து அவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
படகிலிருந்து கடலில் இறந்த குடியேற்றதாரர்கள் நம்பிக்கையின் பாதையாக இல்லாமல், இறப்பின் பாதையாக இருந்துவிட்டனர் எனற திருத்தந்தை, சில வாரங்களுக்கு முன்னர் இத்தகைய செய்தி ஒன்றைக் கேட்ட போது, இவ்விடம் வந்து செபித்து எனது ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுவதற்கு எண்ணினேன் என்றார்.
அங்கு பணிசெய்யும் தன்னார்வப் பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, ரம்ஜான் நோன்பைத் தொடங்கும் அன்பு முஸ்லீம் குடியேற்றதாரர்க்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
குடியேற்றதாரரின் நெருக்கடி நிலைகள் களையப்பட்டு, மாண்பு நிறைந்த வாழ்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், பல சகோதர சகோதரிகள்மீது நாம் பாராமுகமாய் இருப்பதற்கு ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்போம் என்றும் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.