2013-07-06 16:27:49

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையின் பழைய அமைப்புமுறைகளைப் புதுப்பிப்பதற்கு நாம் பயப்படக் கூடாது


ஜூலை,06,2013. கிறிஸ்தவராய் இருப்பது என்பது வெறும் செயல்களைச் செய்வது என்பதல்ல, மாறாக, தூய ஆவியால் புதுப்பிக்கப்படுவதற்குத் தன்னையே கையளிப்பதாகும் என்றும், திருஅவையின் வாழ்விலும்கூட, பயமின்றி புதுப்பிக்கப்படவேண்டிய பழங்கால அமைப்புமுறைகள் உள்ளன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர் என்ற இயேசுவின் வார்த்தைகளை இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு கொணர்ந்த புதுப்பித்தல் குறித்த சிந்தனைகளை வழங்கினார்.
திருச்சட்டத்தின் கோட்பாடு இயேசுவோடு சிறப்புப் பெற்று புதுப்பிக்கப்பட்டது, இயேசு அனைத்தையும் புதியதாக்கினார், இயேசு திருச்சட்டத்தின் உண்மையான புதுப்பித்தலைக் கொண்டுவந்தார், அதே திருச்சட்டத்தை மேலும் சீர்செய்து புதுப்பித்தார் என்று கூறினார் திருத்தந்தை.
திருச்சட்டத்தின் கோரிக்கைகளைவிட மேலும் அதிகமாக இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார், திருச்சட்டம் நம் பகைவர்களை வெறுப்பதற்கு அனுமதியளிக்கின்றது, ஆனால் இயேசு பகைவர்களுக்காகச் செபிக்கச் சொல்கிறார், இதுவே இயேசு போதித்த இறையரசு, எல்லாவற்றுக்கும் மேலாக, புதுப்பித்தல் நம் இதயங்களில் இருக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவராய் இருப்பது என்பது, இந்தப் புதிய வாழ்வில் இயேசுவால் புதுப்பிக்கப்பட நம்மையே அனுமதிப்பதாகும் என்றும், கிறிஸ்தவராய் இருப்பது என்பது, நான் ஒவ்வொரு ஞாயிறும் திருப்பலிக்குச் செல்கிறேன், அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்பதல்ல, ஆனால் அனைத்தையும், நம் வாழ்வையும், நம் இதயத்தையும் புதுப்பிக்கும் தூய ஆவியால் நம்மைப் புதுப்பிக்கப்பட அனுமதிப்பதாகும் என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ வாழ்விலும், திருஅவையின் வாழ்விலும்கூட பழைய அமைப்புமுறைகள் உள்ளன, அவைகளைப் புதுப்பிக்க வேண்டிய தேவை உள்ளது, கலாச்சாரங்களோடு உரையாடல் நடத்துவதன்மூலம் திருஅவை எப்போதும் இதன்மீது கருத்தாய் இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பெந்தெகோஸ்தே நாளில் அன்னைமரியா சீடர்களோடு இருந்தார், தாய் இருக்கும் இடத்தில் பிள்ளைகள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள், எனவே நற்செய்தியின் புதினம் குறித்தும், தூய ஆவி கொணரும் புதுப்பித்தல் குறித்தும், நம்மைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் கடந்துபோகும் அமைப்புமுறைகளை விட்டுவிடவும் பயப்படாமல் இருப்பதற்கு வரம் கேட்போம், நாம் பயப்பட்டால் நம் தாய் இருக்கிறார் என்பதை உணருவோம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.