2013-07-06 16:37:59

ஒரிசாவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவருக்கு விருது


ஜூலை,06,2013. ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளைப் பாராட்டி, அவருக்கு, தேசிய சிறுபான்மை உரிமைகள் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒரிசாவின் கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணியாளர் அஜய் சிங் அவர்கள் இவ்வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லயில் இவ்விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்ட சிறுபான்மை உரிமைகள் தினத்தையொட்டி தேசிய சிறுபான்மை உரிமைகள் அவை ஏற்பாடு செய்திருந்த இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அருள்பணியாளர் அஜய் சிங்க்கு இவ்விருதை வழங்கினார்.
இவ்விருது 2 இலட்சம் ரூபாய் காசோலையையும், ஒரு சான்றிதழையும் கொண்டது.
கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு ஆகஸ்டில் ஏழு வாரங்களுக்கு இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கு எதிராக வன்முறையில் 100 பேருக்குமேல் இறந்தனர் மற்றும் ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்தனர்.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.