2013-07-05 16:32:07

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்கத் திருமடல் “விசுவாச ஒளி” (Lumen Fidei)


ஜூலை,05,2013. விசுவாசம் குறித்த, “Lumen Fidei” அதாவது “விசுவாச ஒளி” என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்கத் திருமடல், இவ்வெள்ளிக்கிழமையன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
மூன்று இறையியல் புண்ணியங்கள் குறித்த பாப்பிறையின் போதனைகளை நிறைவு செய்வதாய் இந்தத் திருமடல் உள்ளது.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2005ம் ஆண்டில் வெளியிட்ட பிறரன்பு குறித்த "Deus Caritas Est" திருமடல், 2007ம் ஆண்டில் வெளியிட்ட நம்பிக்கை குறித்த "Spe Salvi" திருமடல் ஆகிய இரண்டையும் தொடர்ந்து, விசுவாசம் குறித்த Lumen Fidei என்ற திருமடலை இந்த விசுவாச ஆண்டில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“விசுவாச ஒளி” என்ற இத்திருமடல் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே அறிவித்தது போல, இத்திருமடல் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் தொடங்கப்பட்டது. இதில் மூன்று பிரிவுகளில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இறையியல் பாணி அமைந்திருப்பது தெரிகின்றது.
முன்னுரை, முடிவுரை உட்பட 5 பிரிவுகளுடன் 82 பக்கங்களைக் கொண்டுள்ள “விசுவாச ஒளி” திருமடலின் இறுதிப் பிரிவில், பொது நலனுக்குச் சேவை செய்வதில் விசுவாசத்தின் பங்கு பற்றியும், துன்புறுவோருக்கு நம்பிக்கை கொடுப்பது பற்றியும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொடுக்கும் முன்னுரிமைகள் அழுத்தமாக கூறப்பட்டுள்ளன.
புனித பிரான்சிஸ் அசிசி, முத்திப்பேறுபெற்ற அன்னை தெரேசா போன்ற எத்தனையோ பல விசுவாசத்தின் ஆண்களும் பெண்களும், துன்புறும் மனிதர்களை ஒளியின் இடைநிலையாளர்களாகக் கண்டனர் எனச் சொல்லி, அன்னைமரியின் செபத்தோடு இத்திருமடலை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.