2013-07-05 16:39:09

திருத்தந்தை பிரான்சிஸ் : வத்திக்கான் நாட்டை புனித வளன் மற்றும் அதிதூதர் மிக்கேலுக்கு அர்ப்பணிப்பு


ஜூலை,05,2013. வத்திக்கானின் நிர்வாகக் கட்டிடத்துக்கு அருகில் புதிதாக எழுப்பப்பட்டுள்ள அதிதூதர் புனித மிக்கேல் திருவுருவ நினைவுச் சின்னத்தை இவ்வெள்ளிக்கிழமை காலையில் ஆசீர்வதித்து வத்திக்கான் நாட்டை புனித வளன் மற்றும் அதிதூதர் புனித மிக்கேலிடம் அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முதலில் புனித வளனிடமும், பின்னர் புனித மிக்கேல் அதிதூதரிடமும் இறைஞ்சும் இரண்டு செபங்களைச் செபித்து வத்திக்கான் நாட்டுக்காக இவர்களிடம் இறைஞ்சினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீடத்தைக் கண்காணிக்குமாறும், திருஅவையின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒவ்வொரு சதித்திட்டத்திலிருந்தும் அதனைப் பாதுகாக்குமாறும், மனிதர்கள் சோதனைகளை எதிர்த்து வெற்றி கொள்பவர்களாக இருக்குமாறும் புனித வளனிடம் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் நகர நாட்டைப் பாதுகாக்குமாறு அதிதூதர் புனித மிக்கேலிடம் செபித்து அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து, அரைமணி நேரம் இடம்பெற்ற இந்நிகழ்வு முழுவதும் இருந்தார் எனத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் நாட்டின் நிர்வாகத் தலைவர் கர்தினால் ஜூசப்பே பெர்த்தெல்லோ முதலில் அங்கிருந்த சிறிய குழுவினரை வரவேற்றுப் பேசிய பின்னர், வத்திக்கான் நாட்டின் முன்னாள் நிர்வாகத் தலைவர் கர்தினால் ஜொவான்னி லயோலோவும் சிறிய உரையாற்றினார்.
அதிதூதர் புனித மிக்கேல் திருவுருவ நினைவுச் சின்னம், இன்னும், இதற்கருகில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள புனித வளன் நீர் ஊற்றின் முக்கியத்துவம் குறித்து இந்நிகழ்வில் விளக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.