2013-07-05 16:39:34

திருத்தந்தை பிரான்சிஸ் : முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், இரண்டாம் ஜான் பால் ஆகியோரைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல்


ஜூலை,05,2013. முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், இரண்டாம் ஜான் பால் உட்பட 12 இறையடியார்களைப் புனிதர் மற்றும் முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவது குறித்த ஆவணங்களுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி மரணமடைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற ஒரு புதுமை உட்பட மூன்று இறையடியார்களின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகள் குறித்த விபரங்கள் இவ்வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
முத்திப்பேறுபெற்ற ஒருவரைப் புனிதர் என அறிவிப்பதற்கு ஒரு புதுமை இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை திருஅவையில் இருக்கின்றபோதிலும், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்திருப்பது அவரின் விருப்பம் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்டுவரும் இவ்வேளையில், இப்பொதுச் சங்கத்தைத் தொடங்கியவர் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான் என்பதும், திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டதற்கு அவர் பெயரால் இடம்பெற்ற ஒரு புதுமையே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், 1936ம் ஆண்டில் இஸ்பெயினில் இடம்பெற்ற புரட்சியில் விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்ட 42 மறைசாட்சிகள், இன்னும், இறையடியார்கள் Nicola D'Onofrio, Bernardo Filippo, Maria Isabella, Maria Carmen Rendiles Martínez, Giuseppe Lazzati ஆகியோரின் வீரத்துவமான புண்ணிய வாழ்வு குறித்த விபரங்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.