2013-07-05 16:39:58

திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளின் செய்தியின் மையம் அவரது கருணை


ஜூலை,05,2013. நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்றுரைத்த இயேசுவின் திருவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், கடவுளின் செய்தியின் மையம் அவரது கருணையே என்று கூறினார்.
இயேசு பாவிகளோடு உணவருந்துகிறார் என்பதைக் குறை கூறிய பரிசேயர்களுக்குப் பதிலுரைத்த இயேசுவின் திருவார்த்தைகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், பணப்பற்றுடையவர்கள், நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்கள் மற்றும் உரோமையர்களுக்காகத் தங்களின் சொந்த மக்களிடமிருந்து வரி தண்டுபவர்கள் என்பதால், வரி தண்டுபவர்கள் பாவிகள் என்று கருதப்பட்டனர் என்று கூறினார்.
ஆயினும், வரி தண்டுபவராகிய மத்தேயுவை இயேசு கருணையுடன் நோக்கினார், இயேசுவின் அழைப்பை அவர் கேட்டு மகிழ்ச்சியால் நிரம்பி, அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார், அவரின் கருணையைப் பெற்ற அந்த நேரம் மத்தேயுவுக்கு ஆழமான ஆன்மீக அனுபவமாக இருந்தது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இரண்டாவது தருணம் விழாவாக வருகிறது. இயேசு பாவிகளோடு விருந்து கொண்டாடினார், அங்கே கடவுளின் கருணை கொண்டாடப்பட்டது, அங்கே கடவுளின் கருணை, வாழ்வை மாற்றியது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வியப்பூட்டும் சந்திப்பும், விழாவும் நற்செய்தியை அறிவிப்பின் அன்றாடப் பணியாக வருகின்றது என்று கூறிய திருத்தந்தை, இப்பணி அந்த முதல் சந்திப்பின் நினைவிலிருந்து, அந்த விழாவிலிருந்து ஊட்டம் பெற வேண்டும் என்று கூறினார்.
இயேசு வெளியே சென்று ஏழைகளையும் நோயாளிகளையும் கண்டுபிடித்து அவர்களோடு விழாக் கொண்டாடினார், இப்பழக்கத்தைத் தொடர்ந்த இயேசு பாவிகளோடும் விழாக் கொண்டாடி அவர்களுக்குத் தமது மன்னிப்பை அருளினார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.