2013-07-05 16:46:57

கிறிஸ்தவத் தொழிலதிபர் : உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் ஊழலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்


ஜூலை,05,2013. இந்தியாவில், மத்திய அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு குறித்த புதிய மசோதா இந்திய சமூகத்துக்கென எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான முயற்சி என்று, உலகளாவிய கிறிஸ்தவ வணிக அமைப்பின் நிறுவனர் Freddy Mendonca கருத்து தெரிவித்தார்.
எனினும், இம்மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஊழலிலிருந்து இது பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் Mendonca கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட சிறாரில் 43 விழுக்காட்டினர் நீண்டகால ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் வாழும்வேளை, நாட்டில் பசியை அகற்றுவதற்கு, இந்தச் சிறப்பான மசோதா உறுதியளிக்கின்றது என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இம்மசோதா, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை அளிக்க வழி செய்கின்றது.
இந்த திட்டத்தின்கீழ் 80 கோடிப் பேருக்கு மிகக் குறைந்த விலையில் மாதம் 5 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்படும். உணவுப் பொருட்களின் விலை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும்.
இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் இரண்டாயிரம் கோடி டாலர்வரை செலவாகும். உலகில் செயல்படுத்தப்படும் மிகப்பெரும் உணவுத் திட்டமாக இது இருக்கும் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.