2013-07-04 16:12:25

திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் கடவுளின் குழந்தைகள், இந்த அடையாள அட்டையை யாரும் நம்மிடமிருந்து திருட முடியாது


ஜூலை,04,2013. இயேசு நம்மைக் கடவுளின் குழந்தைகளாக என்றென்றும் ஆக்கினார், நமக்கு அடையாள அட்டையாக இருக்கும் இதனை யாரும் நம்மிடமிருந்து திருட முடியாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில், முடக்குவாதமுற்றவரை இயேசு குணப்படுத்திய இந்நாளைய நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இவ்வுலகை இறைவனோடு ஒப்புரவாக்கி அதனைப் புதுப்படைப்பாக்கியதே உண்மையான புதுமை என்று கூறினார்.
இயேசு, முடக்குவாதமுற்றவரிடம் மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சொன்னபோது, அந்த நபர் உடலளவில் குணமாக விரும்பியதால் சற்றே ஏமாற்றம் அடைந்திருக்கலாம் என்றுரைத்த திருத்தந்தை, இயேசு இப்படிச் சொன்னதைக் கேட்ட மறைநூல் அறிஞர்கள் சிலர், கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும், இவன் கடவுளைப் பழிக்கிறான் என்று தமக்குள் சொல்லிக் கொண்டதால், இயேசு முடக்குவாதமுற்றவரின் உடலையும் குணப்படுத்தினார் என்று விளக்கினார்.
குணமாக்குதல், போதனை, பழிப்புரைக்கு எதிரான உறுதியான சொற்கள் ஆகியவை ஓர் அடையாளம் மட்டுமே, இவை இயேசு செய்ததற்கும் மேலான ஓர் அடையாளம், அதுதான் பாவங்களின் மன்னிப்பு என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வுலகம் இயேசுவில் கடவுளோடு ஒப்புரவாகின்றது, இது மிக ஆழமான புதுமை என்று கூறினார்
இந்த ஒப்புரவு உலகின் மறுபடைப்பு, இது இயேசுவின் அதி உன்னதமான மறைப்பணி, பாவிகளாகிய நம் அனைவரையும் மீட்கும் பணி, இயேசு இதனை வெறும் வார்த்தைகளாலும், அடையாளங்களாலும், சாலையில் நடந்து செல்வதாலும் செய்யவில்லை, மாறாக, இதனை தமது சதையால் செய்தார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளாகிய இயேசு, பாவிகளாகிய நம்மை நமது உட்புறத்திலிருந்து குணமாக்குவதற்காக நம்மைப்போல் ஒருவரானார் என்றும், அனைத்துப் பாவங்களையும் தம்மீது சுமந்து தானே பாவமாகி, நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்தார் என்றும், இதுவே புதிய படைப்பு, இதுவே மாபெரும் புதுமை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதுவே நமது துணிச்சலுக்கு ஆணிவேர் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நான் விடுதலைப் பெற்றுள்ளேன், நான் வானகத் தந்தையால் அன்பு செய்யப்படும் குழந்தை, நான் வானகத் தந்தையை அன்பு செய்கிறேன் என்ற துணிச்சலும் ஏற்படுகின்றது, இவ்வாறு நம்மை உணர வைக்கும் கடவுளின் இவ்வேலையைப் புரிந்து கொள்வதற்கு ஆண்டவரிடம் அருள் கேட்போம் என்று மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.