2013-07-04 16:16:19

2012ம் ஆண்டின் திருப்பீடத்தின் நிதிநிலை அறிக்கை


ஜூலை,04,2013. திருப்பீடத்தின் நிதி நிர்வாகம், திறமையுடன் நன்றாகச் செயல்பட்டதால் 2012ம் ஆண்டில் 21,85,622 யூரோக்கள் இலாபம் கிடைத்துள்ளதாக இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட திருப்பீடத்தின் 2012ம் ஆண்டுக்கான நிதி அறிக்கை கூறுகிறது.
திருப்பீடத்தின் நிர்வாக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கர்தினால்கள் அவை இத்திங்கள், இச்செவ்வாய் தினங்களில் வத்திக்கானில் நடத்திய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2012ம் ஆண்டின் நிதி அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவியப் பொருளாதார நெருக்கடிகளால், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்காக வழங்கப்படும் இராயப்பர் காசு, பல்வேறு துறவு சபைகள் வழங்கிய தொகை ஆகியவை 2011ம் ஆண்டைவிட 2012ம் ஆண்டில் 7.45 விழுக்காடு குறைவு எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டில் இராயப்பர் காசு நன்கொடையால் 69,711,722.76 டாலர் கிடைத்தது, ஆனால், இத்தொகை, 2012ம் ஆண்டில், 65,922,637.08 டாலர் கிடைத்தது எனக் கூறும் அவ்வறிக்கை, 2012ம் ஆண்டில் துறவு சபைகளின் பங்களிப்பும் 5.09 விழுக்காடு குறைவு எனவும் கூறுகிறது.
2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 2,823 பேர் வத்திக்கானில் பணியாற்றினர் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இக்கர்தினால்கள் அவையில், ராஞ்சிப் பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.