2013-07-03 15:08:16

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் காயங்கள் வழியாக அவரை நாம் சந்திக்கிறோம்


ஜூலை,03,2013. வாழும் கடவுளை நாம் சந்திப்பதற்கு, பசியாய் இருப்பவர், ஏழைகள், நோயாளிகள் மற்றும் சிறையிலுள்ள சகோதர சகோதரிகளில் இயேசுவின் காயங்களை நாம் கனிவுடன் முத்தி செய்ய வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருத்தூதர் புனித தோமா விழாவான இப்புதன்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், படிப்பு, தியானம், உடலை ஒறுத்தல் ஆகியவை, வாழும் கிறிஸ்துவை சந்திப்பதற்குப் போதுமானவை அல்ல, மாறாக, ஏழைகள், நோயாளிகள் மற்றும் தேவையில் இருப்போரில் பிரசன்னமாக இருக்கும் கிறிஸ்துவின் தழும்புகளை நாம் தொடும்போது புனித தோமா போன்று நமது வாழ்வு மாறும் என்றும் கூறினார்.
இயேசு தான் உயிர்த்த பின்னர் திருத்தூதர்களுக்குத் தோன்றியபோது தோமா அங்கு இல்லை, ஆனால் தோமா தன்னைப் பார்ப்பதற்கு ஒரு வாரம் காத்திருக்க வைத்தார் இயேசு என்றுரைத்த திருத்தந்தை, இயேசு இவ்வாறு நேரம் கொடுக்கும்போது அது நம் ஒவ்வொருவருக்கும் நல்லது என்பதை அவர் நம்புகிறார் என்றும் கூறினார்.
இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை நம்புவதற்கு அவரின் காயங்களில் தனது கைகளை இட்டுப் பார்க்க வேண்டுமென்பதில் தோமையார் பிடிவாதமாய் இருந்தார், பிடிவாதமுள்ள இம்மனிதர் மாபெரும் செயல் ஒன்றை நாம் புரிந்துகொள்ளச் செய்கிறார் என்று கூறிய திருத்தந்தை, ஆண்டவர் உண்மையிலேயே உயிர்த்துவிட்டார் என்பதையும் தாண்டி கிறிஸ்துவின் இறைமை குறித்த விசுவாச அறிக்கையைச் செய்த முதல் திருத்தூதராகவும் தோமா விளங்குகிறார் என்று விளக்கினார் .
திருஅவையின் வரலாற்றில் கடவுளை நோக்கிய பாதையில் சில தவறுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், தியானம், தபம், நோன்பு போன்ற உடலை ஒறுக்கும் செயல்களால் வாழும் இயேசு கிறிஸ்துவை அடைய முடியும் என்று நம்புகின்றனர், ஆனால், இயேசு தம்மைச் சந்திக்கும் பாதையைத் தமது காயங்களில் காண வேண்டுமெனச் சொல்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பிரான்சிஸ் தொழுநோயாளியைத் தழுவியபோது அவருக்கு என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்குமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.