2013-07-03 15:01:03

அன்னைமரியா திருத்தலங்கள் – Bonaria அன்னைமரியா திருத்தலம், Cagliari, இத்தாலி


ஜூலை,03,2013. இத்தாலி நாட்டிலுள்ள சர்தேஞ்ஞா(Sardegna) தீவு, அந்நாட்டின் சிசிலி தீவுக்கு அடுத்தபடியாக, மத்தியதரைக்கடலிலுள்ள இரண்டாவது பெரிய தீவு ஆகும். ஆங்கிலத்தில் இத்தீவு சர்தீனியா(Sardinia) தீவு என்று அழைக்கப்படுகின்றது. இது இத்தாலியைச் சேர்ந்த தன்னாட்சிப்பகுதி ஆகும். இதன் பரப்பளவு 23,821 சதுர கி.மீ. ஆகும். இத்தீவின் 1,849 கிலோ மீட்டர் நீளக்கடற்கரை பெரும்பாலும் உயரமாக, பாறையாக இருக்கின்றது. இத்தீவின் கடற்கரைகளில் சிறிய தீவுகளும் உள்ளன. சர்தேஞ்ஞா தீவு நிலநடுக்கப் பாதிப்பு ஏற்படாத பகுதியாகும். இத்தீவின் பாறைகள் ஏறக்குறைய 50 கோடி ஆண்டுகள் பழமையுடையன. இத்தீவின் 13.6 விழுக்காட்டுப் பகுதி மலைகளாகும். 18.5 விழுக்காட்டுப் பகுதி சமவெளிகளாகும். 67.9 விழுக்காட்டுப் பகுதி குன்றுகளால் நிறைந்தது. இத்தீவில் 54 செயற்கை ஏரிகளும் நீர்த்தேக்கங்களும் உள்ளன. இவற்றிலிருந்து தண்ணீரும் மின்சாரமும் அத்தீவு மக்களுக்குக் கிடைக்கின்றன. இத்தீவில் பல கனிமங்களும் கிடைக்கின்றன. ஐரோப்பாவில் பழங்காலத்திலிருந்தே மக்கள் குடியிருந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகவும் சர்தேஞ்ஞா தீவு வரலாற்று ஏடுகளில் குறிக்கப்பட்டுள்ளது. சர்தேஞ்ஞா தீவின் தலைநகர் Cagliari என்ற நகரமாகும். அன்பு நேயர்களே, நாம் இன்று கேட்கவிருக்கும் Bonaria அன்னைமரியா திருத்தலம் இந்த Cagliari நகரத்தில்தான் உள்ளது.
Bonaria என்றால் நலமளிக்கும் சுத்தமான காற்று என்று பொருள். Bonaria அன்னைமரியா திருத்தலத்தின் வரலாறு 14ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. இஸ்பெயினிலிருந்து இத்தாலி நோக்கி வந்து கொண்டிருந்த கப்பல் ஒன்று 1370ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி பெரும் புயலால் தாக்கப்பட்டது. அந்தக் கப்பலில் பயணம் செய்த பணியாளர்கள் மற்றும் பயணிகளின் உயிருக்குப் பெரிய ஆபத்து ஏற்பட்டது. அனைவரும் அச்சத்தால் நடுங்கிக் கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கப்பல் மாலுமி அனைவரையும் காப்பாற்றும் நோக்கத்துடன் கப்பலிலிருந்த அனைத்துச் சரக்குகளையும் கடலில் எறியுமாறு கட்டளையிட்டார். உடனே பணியாளர் குழு அனைத்தையும் தூக்கிக் கடலில் வீசினர். ஆனால் எந்தப் பலனும் இல்லை. பின்னர் அக்கப்பலில் ஒரு பெரிய கூடை இருந்ததைப் பார்த்தனர். கடைசியாக அந்தக் கூடையையும் தூக்கிக் கடலில் வீசினர். அந்தக் கூடையைத் தண்ணீருக்குள் போட்டவுடன் புயல் ஓய்ந்தது. அந்தக் கப்பலை அந்தக் கூடையை நோக்கிச் செலுத்தி அதை எடுக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. கடைசியாக கப்பல் வழக்கமான பாதையில் செல்லத் தொடங்கியது. எனினும், அந்தக்கூடை Bonaria குன்றின் அடிவாரத்தின் கடற்கரையை ஏப்ரல் 24ம் தேதியன்று தொட்டு நின்றது.
அந்தக் கூடை கடற்கரையை அடைந்தபோது பலர் அங்கு இருந்தனர். அனைவரும் விரைந்து சென்று அதற்குள்ளே என்ன இருக்கின்றது என்பதை அறிவதற்கு ஆவலுடன் காத்திருந்தனர். அக்கூடையைத் திறப்பதற்கு முயற்சித்தனர். ஆனால் அந்தக் கடற்கரையில் அப்போது இருந்த யாராலும் இயலவில்லை. அக்கூடையைத் தூக்குவதற்கு முயற்சித்தனர். அதுவும் முடியவில்லை. அது மிகவும் பாரமாக இருந்தது. உடனடியாக அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு குழந்தை, “Mercedarian துறவறக் குருக்களில் ஒருவரை அழையுங்கள்!” என்று கத்தியது. அக்குருக்களும் உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்து வந்து மிக எளிதாக அக்கூடையைத் தூக்கி அதனைத் தங்களது ஆலயத்துக்கு எடுத்துச் சென்றனர். அனைத்து மக்களும் அவ்வாலயத்தில் இருந்தபோது அமைதியாக, செபித்துக் கொண்டே அக்குருக்கள் அக்கூடையைத் திறந்தனர். அதில் புனித கன்னிமரியா தமது கரங்களில் குழந்தை இயேசுவைத் தாங்கியபடி ஒரு வியத்தகு, அழகான திருவுருவம் இருந்தது. அவ்வன்னையின் வலது கரத்தில் எரியும் மெழுகுதிரியும் இருந்தது. 1.56 மீட்டர் உயரமுடைய இவ்வுருவம் மரத்தால் செய்யப்பட்டது.
கார்லோ கட்டாலன் என்ற அருள்பணியாளர் 1330ம் ஆண்டுவாக்கில் இவ்வாலயத்தைக் கட்டி அருள்பொழிவு செய்த போது அவர் மெர்சி துறவு சபை குருக்களிடம், இந்த இடத்துக்கு ஒரு மாபெரும் பெண் வந்து குடியிருப்பார், அப்பெண்ணின் வருகைக்குப் பின்னர் இப்பகுதியைத் தாக்கியுள்ள மலேரியா நோய் மறைந்துவிடும், அப்பெண்ணின் திருவுருவம் Bonaria கன்னிமரியா என அழைக்கப்படும் என்று இறைவாக்காகச் சொன்னார். ஆதலால், கடலில் மிதந்து வந்த அத்திருவுருவம் அவ்வாலயத்தில் வைக்கப்பட்டபோது அக்குருக்கள் அந்த இறைவாக்கை நினைவுகூர்ந்தனர். அருள்பணி கார்லோ சொன்னது போல, அத்திருவுருவத்துக்கு Bonaria அதாவது நலமளிக்கும் சுத்தமான காற்று அன்னைமரி என அக்குருக்கள் பெயரிட்டனர். இந்தப் புதுமையால் இவ்வன்னைமரியா பக்தி காற்றுப் போல வேகமாகப் பரவியது. குறிப்பாக கப்பலோட்டிகள் இத்தாயை தங்களது பாதுகாவலராகப் போற்றினர். இத்தாயின் பக்தி எங்கும் பரவியது. Bonaria அன்னைமரியாவை சர்தேஞ்ஞாவின் பாதுகாவலராக 1908ம் ஆண்டில் திருத்தந்தை 10ம் பத்திநாதர் அறிவித்தார். இந்த அறிவிப்பின் நூறாம் ஆண்டையொட்டி 2008ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் Bonaria அன்னைமரியா திருத்தலம் சென்றார். அச்சமயம் அத்திருவுருவத்துக்கு ஒரு தங்க ரோஜாவையும் காணிக்கையாக அளித்தார் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவ்வன்னை Bonaria வந்ததன் 600ம் ஆண்டைமுன்னிட்டு திருத்தந்தை 6ம் பவுல், 1970ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி அத்திருத்தலம் சென்றார். முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால், 1985ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அத்திருத்தலம் சென்றார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் வருகிற செப்டம்பரில் Bonaria அன்னைமரியா திருத்தலம் செல்லவுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் Bonaria அன்னைமரியா திருத்தலத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டினாவில் பேராயராகப் பணியாற்றிய புவனோஸ் ஐரெஸ் (Buenos Aires) நகரத்துக்கு, Bonaria அன்னைமரியாவின் பெயரே இடப்பட்டுள்ளது. புவனோஸ் ஐரெஸ் நகரை உருவாக்கிய இஸ்பானியரான Pedro de Mendoza அவ்விடத்துக்கு தூய மூவொரு கடவுளின் நகர் எனப் பெயரிட விரும்பினார். ஆனால், Bonaria அன்னைமரியா மீது பக்திகொண்ட சர்தீனிய கப்பலோட்டிகள், இந்நகரை அவ்வன்னையின் பெயரால் அழைக்க வேண்டுமென விரும்பினர். அதனால் தூய மூவொரு கடவுளின் நகர் மற்றும் Bonaria அன்னைமரியா துறைமுகம் என அழைப்பதற்கு ஒத்துக் கொண்டனர். ஆயினும் இப்பெயர் நீளமாக இருப்பதால் Buenos Aires அதாவது இத்தாலியத்தில் Bonaria, ஆங்கிலத்தில் good air, தமிழில் நலமளிக்கும் சுத்தமான காற்று என்ற பொருளில் அந்நகர் அழைக்கப்படுகிறது. இத்தாலியின் Cagliari நகரிலுள்ள Bonaria அன்னைமரியா திருவுருவம் போன்ற ஒரு திருவுருவம் இம்மாதம் முதல் தேதியான இத்திங்களன்று அர்ஜென்டினாவின் புவனோஸ் ஐரெஸ்க்கு (Buenos Aires) அனுப்பப்பட்டுள்ளது.
Bonaria குன்று, Cagliari நகரின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. Aragona மன்னர் அல்போன்சோ 1323ம் ஆண்டில் Cagliari நகரைக் கைப்பற்ற எண்ணி Bonaria குன்றில் பாளையம் அமைத்தார். இவ்விடம் சுத்தமான காற்று வீசும் இடமாக இருந்ததால் அவர்கள் அவ்விடத்தை தங்களது இஸ்பானிய மொழியில் Buen Ayre என அழைத்தனர். மதில்களைக் கொண்ட அரண்மனையையும் ஓர் ஆலயத்தையும் கட்டினார். 1324ம் ஆண்டில் அந்நகரைக் கைப்பற்றினார். 1325ம் ஆண்டில் அரசர் இவ்வாலயத்தை மெர்சி துறவு சபையினருக்குக் கொடையாகக் கொடுத்தார். பின்னர் அச்சபையினர் இங்கு ஓர் இல்லத்தைக் கட்டினர். புனித பீட்டர் நொலாஸ்கோவால் இஸ்பெயினின் பார்செலோனாவில் ஆரம்பிக்கப்பட்ட இத்துறவு சபை, மூர்ஸ் இனத்தவரிடமிருந்து கிறிஸ்தவ அடிமைகளை விடுதலை செய்யும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. பல அடிமைகள் விடுதலை அடைவதற்கு Bonariaவில் மறைப்பணி செய்த மெர்சி துறவு சபை குருக்கள் உதவினர். Bonaria அன்னை மரியாவுக்கு 1704ம் ஆண்டில் புதிய ஆலயம் கட்டத் தொடஙகினர். இது 1926ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இதே ஆண்டில் திருத்தந்தை 11ம் பத்திநாதர் இதனை மைனர் பசிலிக்கா நிலைக்கு உயர்த்தினார். இரண்டாம் உலகப் போரின்போது 1943ம் ஆண்டில் இப்பசிலிக்காவின் கலைவண்ண வேலைப்பாடுகள் சூறையாடப்பட்டு அனைத்தும் அழிந்தன. பின்னர் 1947ம் ஆண்டில் மீண்டும் சீரமைப்புப் பணிகள் தொடங்கின. இப்பணிகள் 1988ம் ஆண்டு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவன்று நிறைவடைந்தன.
இத்தாலியின் Bonaria அன்னை மரியா, அதாவது நலமளிக்கும் சுத்தமான காற்று அன்னை மரியா விழா ஏப்ரல் 24ம் தேதியன்று சிறப்பிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.