2013-07-02 15:30:27

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' உவமை - பகுதி 3


RealAudioMP3 "உன்னுடைய கவலைகள், தேவைகளின்போது நீ செபிக்கிறாய். உன்னுடைய மகிழ்வின் உச்சியிலும், வாழ்வின் நிறைவிலும் உன்னால் செபிக்க முடிந்தால், அது எவ்வளவோ மேலானது" என்று கூறியுள்ளார் புகழ்பெற்ற கவிஞர் கலீல் கிப்ரான்.
“You pray in your distress and in your need; would that you might pray also in the fullness of your joy and in your days of abundance.”
― Kahlil Gibran, The Prophet
மனம் தளராது தொடர்ந்து செபிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த, இயேசு கூறியுள்ள நள்ளிரவில் நண்பர் என்ற உவமையையும், நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் என்ற உவமையையும் கடந்த சில வாரங்களாகச் சிந்தித்து வருகிறோம்.
'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையில், மூடிய கதவைத் தொடர்ந்து தட்டிக்கொண்டிருந்த நமது நாயகன், ஒரே இடத்தில் நின்று, ஒரு சில மணித்துளிகளில் தன் தேவையை நிறைவேற்றிக் கொண்டார். லூக்கா 18ம் பிரிவில் நாம் சந்திக்கும் கைம்பெண்ணோ ஒரே நாளில், ஒரே இடத்தில் நின்றபடி தான் தேடியதைப் பெறவில்லை. பல நாட்கள், ஏன்? பல மாதங்கள், பல ஆண்டுகள் விடாமுயற்சியுடன் நீதிமன்றத்திற்கும், நடுவரின் வீட்டுக்கும், நடுவர் சென்ற அனைத்து இடங்களுக்கும் நடையாய் நடந்து சென்று, தான் தேடியதைப் பெற்றார் என்பதை உணரலாம். எவ்வளவு காலம் இந்தக் கைம்பெண் தன் முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை லூக்கா நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. "நடுவரோ நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை" (லூக்கா 18:4) என்ற ஒரே ஒரு குறிப்பை மட்டுமே இந்த உவமையில் காண்கிறோம்.
ஏழைகளுக்கு நீதி கிடைக்க, அல்லது அவர்கள் விண்ணப்பித்த கோரிக்கைகளை நிறைவேற்ற நீதி மன்றங்களும், அரசு அலுவலகங்களும் எத்தனை காலம் எடுக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த கதைதானே! இவர்களில் பலர் எதிர்பார்த்த நீதியான தீர்ப்புகளோ, விண்ணப்பித்திருந்த கோரிக்கைகளோ அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களை வந்தடைந்த செய்திகளையும் நாம் அவ்வப்போது கேட்டு வருகிறோம். பல ஆண்டுகள், நீதி மன்றங்களின் வாசல்களிலும், அரசு அலுவலகங்களின் வாசல்களிலும் தவமிருந்து தங்கள் வேண்டுதல்களின் பலன்களைக் காணவிழையும் பல கோடி ஆதரவற்ற ஏழை மக்களின் பிரதிநிதியாக இந்த உவமையின் நாயகியான கைம்பெண்ணை நாம் சந்திக்கிறோம். இந்த உவமையில் இயேசு நேர்மையற்ற நடுவரைப் பற்றி அதிகம் பேசியிருந்தாலும், மனம் தளராது, மீண்டும், மீண்டும், மீண்டும் நடுவரைச் சென்று சந்தித்த அந்தக் கைம்பெண்தான் இந்த உவமையின் நாயகி.

இஸ்ரயேல் மக்கள் சமுதாயத்தில் வாழ்ந்த கைம்பெண்களின் நிலையைப் புரிந்துகொள்ள முயல்வோம். இவர்களைப்பற்றிய குறிப்புக்கள் பழைய ஏற்பாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றன. கைம்பெண்கள் இழிவாக நடத்தப்படுகின்றனர், அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்பதே இந்தக் குறிப்புக்களில் அடிக்கடி சொல்லப்பட்டுள்ளன. இதோ ஓர் எடுத்துக்காட்டு:

எசேக்கியேல் 22: 6-7
உன்னிடத்திலுள்ள இஸ்ரயேலின் தலைவர்கள் தங்கள் வலிமையால் குருதி சிந்துகிறார்கள்: உன்னிடையே தாய் தந்தையரை அவமதித்தார்கள்: அன்னியரைத் துன்புறுத்தித் தந்தையற்றோரையும் கைம்பெண்களையும் இழிவாய் நடத்தினார்கள்.

ஆண்களை மையப்படுத்தி அமைந்திருந்த இஸ்ரயேல் சமுதாயத்தில், கணவனை இழந்தக் கைம்பெண்கள், நிலம், சொத்து ஆகிய பிற உரிமைகளையும் இழந்தனர். சட்டப்படி உரிமைகள் அற்ற இவர்கள், கணவனின் குடும்பத்தினர் காட்டக்கூடிய கருணையை நம்பியே வாழ வேண்டியிருந்தது. இக்குடும்பத்தின் கருணை கிடைக்காதபோது கைம்பெண்ணின் போராட்டம் துவங்கும். நீதி மன்றங்களில், நடுவர்கள் முன்னிலையில் இந்தப் போராட்டம் தொடரும்.

இஸ்ரயேல் மக்கள் வழக்கப்படி, நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பவர்கள், நேரடியாக தங்கள் வழக்கை வாதாடவேண்டும். அவர்கள் சார்பில் வாதாட, வழக்கறிஞர்கள் கிடையாது. வழக்கிற்குச் சாதகமாகவோ, அல்லது அதற்கு எதிராகவோ ஓரிருவர் சாட்சி சொல்லலாம். இங்கும் ஒரு சிறு பின்னடைவு பெண்களுக்கு உண்டு. பெண்கள் பொது இடங்களில் சாட்சி சொல்வது மிக மிக அரிது. அப்படியே அவர்கள் சாட்சி சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்வதோ, மறுப்பதோ ஆண்களின் விருப்பத்தைப் பொறுத்தது. இத்தகையப் பின்னணியை மனதில் கொண்டு நாம் இந்த உவமையை அணுக வேண்டும்.

உவமையில் கூறப்பட்டுள்ள கைம்பெண்ணின் வழக்கு என்ன? "என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்" (லூக்கா 18:3) என்பதே நடுவரின் முன் கைம்பெண் வைத்த வேண்டுதல். ஒருவேளை, அக்கைம்பெண்ணின் எதிரி, கணவரின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். பாதுகாப்பற்ற, சக்தியற்ற அவரது நிலையை நன்கு உணர்ந்த ஒருவர் அவருக்குத் தீங்கு செய்துவந்ததால், கைம்பெண் நடுவரை நாடி வந்துள்ளார்.

அன்று நடந்தது இன்றும் தொடர்கிறது. சமுதாயத்தில் சக்தியற்றவர்கள் என்று தெரிந்தால், அவர்களைப் பல வழிகளிலும் பயன்படுத்தும், துன்புறுத்தும் மற்றவர்களைக் காணமுடியும். கணவன் இன்றி, குழந்தைகளின் துணையும் இன்றி உள்ள கைம்பெண்கள் சந்திக்கும் துயரங்கள் மனித வரலாற்றில் நீண்டதொரு தொடர்கதை.
தனி மனிதர்கள் மட்டுமல்லாமல், அரசும், பன்னாட்டு நிறுவனங்களும், சமுதாயத்தில் வலுவிழந்தவர்களைப் பந்தாடிவருவது அவலமான துயரம். முன்னேற்றம் என்ற போர்வையில், காடுகளை அழித்தல், தேவையற்ற அணைக்கட்டுகளை உருவாக்குதல், தொழிற்சாலைகளைக் கட்டுதல், அணுமின் நிலையங்களை ஆரம்பித்தல் என்று அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் இதுவரை பலியானது எல்லாமே வலுவற்ற மக்களே! இந்த முன்னேற்ற முயற்சிகளில் ஏழைகளும், பழங்குடியினரும் தொன்றுதொட்டு பயன்படுத்திய நிலங்கள் அநீதியான வழிகளில் அபகரிக்கப்படுகின்றன. எந்த ஒரு நாட்டிலும், இத்தகைய முன்னேற்ற முயற்சிகளுக்காக செல்வந்தரின் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவோ, அல்லது அவர்கள் வேறு வழிகளில் பாதிக்கப்பட்டதாகவோ வரலாறு உள்ளதா? சந்தேகம்தான். பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இருக்கும் ஒரே ஆயுதம், போராட்டம். நீதி கேட்டுப் போராடும் ஏழைகள், அரக்கத்தனமாக நிர்மூலமாக்கப்படுகின்றனர்.
தங்களிடம் உள்ள பணபலம், அதிகாரப்பலம் இவற்றை வேறு எதுவும் அசைக்கமுடியாது என்ற நம்பிக்கையால், அரசுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் இவ்விதம் நடந்துகொள்கின்றன. இத்தகையச் சக்திகளுக்கு எதிராகப் போராடும் வலுவற்றோரின் நம்பிக்கை... இறைவன் ஒருவரே.

இஸ்ரயேல் மக்களின் இறைவன் ஏழைகள், அன்னியர், அனாதைகள், கைம்பெண்கள் ஆகிய வலுவிழந்த மக்கள் சார்பில் இருப்பவர் என்ற கருத்து விவிலியத்தின் பல பகுதிகளில் காணப்படுகின்றது.
விடுதலைப் பயணம் 22 : 21-23
அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.

இறைவாக்கினர் மலாக்கி 3 : 5
அப்போது, "சூனியக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுவோர், கூலிக்காரருக்குக் கூலி கொடுக்காத வம்பர், கைம்பெண்ணையும் அனாதைகளையும் கொடுமைப் படுத்துவோர், அன்னியரின் வழக்கைப் புரட்டுவோர், எனக்கு அஞ்சி நடக்காதோர் ஆகிய அனைவர்க்கும் எதிராகச் சான்று பகர்ந்து தண்டனைத் தீர்ப்பு வழங்க நான் விரைந்து வருவேன்?," என்கிறார் படைகளின் ஆண்டவர்.

மோசேயின் வழியாகவும், இறைவாக்கினர் வழியாகவும் இறைவன் கூறும் உறுதிமொழிகள் தொழுகைக் கூடங்களில் அடிக்கடி வாசிக்கப்பட்டன. இப்பகுதிகளைக் கேட்டுவந்த கைம்பெண்கள், இந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு, கடவுள் எப்படியும் தங்கள் சார்பில் வருவார், தங்களுக்கு நீதி வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் போராடியிருப்பார்கள்.

கடவுள் தன் பக்கம் இருக்கிறார் என்ற நம்பிக்கையை ஒரு கருவியாகக் கொண்டு, இவ்வுலகில் பிறரன்புச் சேவைக்கு இலக்கணமாக வாழ்ந்த முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நாம் அசைபோடுவது நமக்கு நம்பிக்கை அளிக்கும். 'மனம் தளராமல் செபிப்பது' (Praying without losing heart) என்ற தலைப்பில், Thomas Long என்ற மறைபோதகர் அன்னையைப்பற்றி கூறியுள்ள ஒரு நிகழ்வு இதோ:

Edward Bennett Williams என்பவர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், அதிகப் புகழும் செல்வமும் படைத்த ஒரு வழக்கறிஞர். முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர், Richard Nixon அவர்கள் சார்பிலும், Frank Sinatra என்ற புகழ்பெற்ற நடிகர் சார்பிலும் வாதாடியவர். ஒரு முறை இவரைக் காண முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா சென்றார். அமெரிக்காவில் AIDS நோயுற்றோருக்கென ஒரு மருத்துவமனை கட்டுவதற்கு அன்னை தெரேசா அப்போது நிதி திரட்டிக் கொண்டிருந்தார். இந்த மருத்துவமனைக்காக தன்னிடம் நிதி கேட்க அன்னை தெரேசா வருகிறார் என்பதை வழக்கறிஞர் வில்லியம்ஸ் உணர்ந்தார். அவர் தன் நண்பரிடம், " AIDS நோய்க்கு நிதி உதவி செய்ய எனக்கு விருப்பமில்லை. அதேநேரம், அன்னை தெரேசா போன்ற புனிதமான ஒருவருக்கு இல்லை என்று சொல்லவும் எனக்குத் தோன்றவில்லை. என்ன செய்வது?" என்று அவர் தன் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். நண்பர் அவரிடம், "அன்னையை நாம் நல்ல முறையில் வரவேற்று பேசுவோம். ஆனால், அவர்கள் கேட்கும் உதவியைச் செய்ய முடியாது என்பதை மரியாதையுடன் சொல்லிவிடுவோம்" என்று ஆலோசனை கூறினார்.
அன்னை வந்து சேர்ந்தார். தன் மருத்துவமனை பற்றி கூறினார், உதவி கேட்டார். வழக்கறிஞர் வில்லியம்ஸ் அவரிடம் தன்னால் உதவி செய்ய முடியாது என்று மரியாதையாகச் சொன்னார். உடனே, அன்னை தெரேசா அவரிடம், "நாம் சிறிது நேரம் செபிப்போம்" என்று கூறி, இறைவனை நோக்கி ஒரு சிறு செபத்தைக் கூறினார். அந்நேரம், வழக்கறிஞரும் அவரது நண்பரும் கண்களை மூடி செபித்தனர். செபம் முடிந்ததும், அன்னை தெரேசா மீண்டும் தன் விண்ணப்பத்தை முன் வைத்தார். மீண்டும் வில்லியம்ஸ் மரியாதையுடன் மறுத்தார். அன்னை மீண்டும், "வாருங்கள் செபிப்போம்" என்று கூறி மீண்டும் செபித்தார். செபம் முடிந்ததும், அன்னை தெரேசா மீண்டும் தனக்கு வேண்டிய உதவியைக் கேட்டார். வில்லியம்ஸ் மறுத்தார். இம்முறையும் அன்னை, "வாருங்கள் செபிப்போம்" என்று சொன்னதும், "சரி, சரி" என்று கூறிய வழக்கறிஞர் வில்லியம்ஸ், தன் செயலரிடம் திரும்பி, "எனது ‘செக்புக்’கை எடுத்துவாருங்கள்" என்று கூறினார்.

இயேசு கூறிய இந்த உவமையில் நாம் சந்திக்கும் கைம்பெண்ணும், முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா போன்ற உன்னத உள்ளங்களும் இறைவேண்டுதல் பற்றி சொல்லித்தரும் பாடங்களைத் தொடர்ந்து பயில்வோம்.








All the contents on this site are copyrighted ©.