2013-07-02 14:49:22

சிறுபான்மை சமய சமூகங்களைப் பாதுகாப்பதற்குப் பாகிஸ்தான் திருஅவை புதிய முயற்சி


ஜூலை,02,2013. பாகிஸ்தானில் சிறுபான்மை சமய சமூகங்களை, குறிப்பாக, கிறிஸ்தவர்களை வன்முறை மற்றும் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கென சிறப்புக் குழுக்களை உருவாக்கியுள்ளது அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை.
பாகிஸ்தானில் மறைப்பணியாற்றும் துறவு சபைகளின் அதிபர்கள் அவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு கடந்த வாரத்தில் கராச்சியில் நடத்திய கூட்டத்தில் வன்முறையை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் புதிய வழிகள் குறித்து ஆராய்ந்தபோது சமூகப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
பல்வேறு கிறிஸ்தவச் சபைகளைச் சேர்ந்த குருக்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற தொழில்களைச் செய்பவர்களைக் கொண்ட 15 சமூகப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கியுள்ளது அந்தப் பணிக்குழு.
பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிரானப் பாகுபாடுகளைக் களையவும், இனவாதப் பிரிவினைச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், சட்டம் மற்றும் நீதியை ஊக்குவிக்கவும் இக்குழுக்கள் செயல்படும்.
இந்தச் சிறப்பு பாதுகாப்புக் குழுக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு, மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து, சட்டம் சார்ந்த உதவிகளைச் செய்யும் என, அப்பணிக்குழுவை வழிநடத்தும் Rasheed Gill, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.