2013-07-01 13:21:14

வாரம் ஓர் அலசல் – மனசாட்சி என்றால் ....


ஜூலை,01,2013. ஒரு சமயம் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா என்ற பெரியவர் அமெரிக்க ஐக்கிய நாட்டு சிகாகோ நகரத்துக்குச் சென்றிருந்தார். அங்கு ஒரு பயணியர் விடுதியில் சில நாள்கள் தங்கிய பின்னர் அவர் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. அவர் இந்தியாவுக்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு பொருள் தேவைப்பட்டது. அப்பொருளைச் செய்து கொடுக்கும் அந்தக் குறிப்பிட்டக் கடைக்குச் சென்று, அப்பொருளைக் கடையில் காட்டி இது மாதிரி எனக்குப் பொருள் ஒன்று வேண்டும், குறிப்பிட்ட நாளுக்குள் எனக்கு அதைச் செய்து கொடுக்க முடியுமா? என்று கேட்டார். அந்தக் கடைக்காரரும், அதைச் செய்து கொடுக்க முடியும் என்று சொன்னார். பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி அன்று மாலை வந்து அப்பொருளை வாங்கிச் செல்லுங்கள், அதன் விலை 8 டாலர் என்றும் சொன்னார் கடைக்காரர். கடைக்காரர் சொன்ன நாளுக்கு அடுத்த நாள் விஸ்வேஸ்வரய்யா இந்தியாவுக்குப் புறப்பட வேண்டியிருந்தது. ஆதலால் விஸ்வேஸ்வரய்யா அந்தக் கடைக்காரரிடம், நீங்கள் செய்து கொடுக்கும் அந்தப் பொருள் எனக்குத் திருப்தியாக இருந்து, அதைக் குறிப்பிட்ட நாளிலும் நீங்கள் கொடுத்துவிட்டால், ஒரு டாலர் சேர்த்துக் கொடுக்கிறேன் எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டார். பின்னர் அந்த குறிப்பிட்ட நாள் மாலையில் அக்கடைக்குச் சென்றார் விஸ்வேஸ்வரய்யா. அங்கு கடைக்காரர் இல்லை. ஆனால் அந்தப் பொருள் தயாராக இருந்தது. அதை வாங்கிப் பார்த்த விஸ்வேஸ்வரய்யாவுக்குத் திருப்தியாக இருந்ததால், அவர் ஏற்கனவே சொன்னது போல, ஒரு டாலரைச் சேர்த்துக் கொடுத்துவிட்டு பொருளை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். பின்னர் கடைக்கு வந்த கடைக்காரர் வியந்து, விஸ்வேஸ்வரய்யா தங்கியிருந்த முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அங்குச் சென்றார். விஸ்வேஸ்வரய்யா என்ன விடயம் என்று கேட்டதும், “ஐயா, நீங்க அந்தப் பொருளுக்கு அதிகப்படியா ஒரு டாலரைக் கொடுத்துட்டு வந்தீட்டீங்க, அதைத் திருப்பிக் குடுக்குறதுக்குத்தான் வந்தேன், உங்க முகவரியைக் கொடுக்காம வந்தீட்டீங்களே, அதனாலே பல இடங்கள்லே தேடி, கடைசியா இந்த இடத்தைக் கண்டுபிடிச்சேன்” என்று சொன்னார். அப்போது விஸ்வேஸ்வரய்யா, “இதுக்காகவா இவ்வளவுச் சிரமப்பட்டு வந்தீங்க, மற்ற வியாபாரிக செய்யுறது போல நீங்களும் ஏன் இந்த ஒரு டாலரை எடுத்துக்குக் கூடாது, உங்களுக்கு விருப்பமில்லை என்றாலும்கூட நான் வாக்களித்த பணம் தானே” என்று கேட்டார். அதற்கு அந்தக் கடைக்காரர், “அப்படி இல்லை, அந்தப் பணத்தை நான் சம்பாதிக்கவில்லை, அதனால் அதில் எனக்கு உரிமை இல்லை” என்று சொன்னார். விஸ்வேஸ்வரய்யாவும் விடவில்லை. உண்மைதான், இருந்தாலும் நீங்கள் ஏன் அந்த ஒரு டாலரை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டார். அப்போது அந்தக் கடைக்காரர் தன்னுடைய நெற்றியைத் தொட்டு, “நான் அப்படிச் செய்தால் என்னுடைய மன அமைதி குலைந்துவிடும்” என்று பதில் சொன்னார்.
அன்பு நேயர்களே, மனசாட்சியின்படி வாழ்தல் என்பது இதுதான். மனசாட்சியின்படி வாழும்போது அவ்வாழ்வில் மனஅமைதி இருக்கும், மன நிம்மதி இருக்கும். வாழ்வில் எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தால்கூட ஆழ்மனதில் அமைதி இருக்கும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில், நாம் ஒவ்வொருவரும் நமது மனசாட்சியின் குரலுக்கு அதிகமதிகமாகச் செவிசாய்த்து வாழ வேண்டுமென்பதை மிகவும் வலியுறுத்திப் பேசினார். ஆயினும், மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும் என்று சொல்லும்போது, நமது சுயம் சொல்வதையும், நமக்கு எது விருப்பமானதோ, நமக்கு எது ஏற்றதோ, நமக்கு எது இன்பம் கொடுக்குமோ அவற்றைப் பின்சென்று நடப்பது என்று அர்த்தமல்ல. மனசாட்சியின்படி வாழ்வது என்பது இதுவல்ல. மனசாட்சி என்பது அகஅமைதி, உள்ளத்தின் ஆழத்தில் ஏற்படும் அமைதி. அந்த அமைதியில் உண்மை, நன்மை, கடவுளின் குரல் ஆகியவற்றைக் கேட்க முடியும். மனசாட்சி என்பது, நமது இதயத்தில் பேசும் கடவுளோடு நாம் உறவு கொள்ளும் இடமாகும். மனசாட்சி, நம் வாழ்வில் நாம் நடந்து செல்ல வேண்டிய பாதையைத் தேர்ந்து தெளியவும், புரிந்துகொள்ளவும் நமக்கு உதவுகிறது. வாழ்வில் ஒரு தடவை தீர்மானம் எடுத்துவிட்டால் அதிலே முன்னோக்கிச் செல்லவும், அதிலே நிலைத்திருக்கவும் மனசாட்சி நமக்கு உதவுகிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
RealAudioMP3 இவ்வாறு சொன்ன திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பணிந்து வாழ்பவருக்குச் சிறப்பான சான்றாக, வியத்தகு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் என்றும் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் குறிப்பிட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்படிச் சொன்னவுடன் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கரங்களைத் தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் RealAudioMP3 கள். அன்பு நேயர்களே, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், பாப்பிறைத் தலைமைப் பணியில் இறப்புவரை இருக்கலாம் என்ற நிலை இருந்தும்கூட, இதனைத் தொடர்ந்து செய்வதற்குத் தனது உடல்நிலை சாதகமாக இல்லை என்று சொல்லி பதவி விலகினார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்று பல நாடுகளில் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், ஊடகவியலாளரும், மனித உரிமை ஆர்வலர்களும், தங்களது மனசாட்சிக்குக் கட்டுப்பட்டுக் கருத்துக்களைச் சொல்வதால், அதிகாரத்தில் உள்ளவர்களுக்குச் சவால் விடுவதால் மனச்சான்றுக் கைதிகளாக சிறைகளில் கடும் சித்ரவதைகளை எதிர்கொள்கின்றனர். அதேசமயம், மியான்மாரில் இடம்பெறும் அரசியல் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக, அந்நாட்டின் அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று மியான்மார் அரசுத்தலைவர் U Thein Sein இந்த ஜூன் முதல் வாரத்தில் அறிவித்திருப்பது இனிப்புச் செய்தியாக உள்ளது.
ஒரு செயல், சரியா தவறா என்பதைப் பகுத்துப் பார்க்க உதவும் ஓர் உள்தூண்டுதலை மனசாட்சி என்று சொல்லலாம். நம் மனதுக்குள் ஒலிக்கும் குரலை, மனதில் ஏற்படும் ஓர் ஒளியை அதாவது உள்ளொளியை மனசாட்சி என்று சொல்லலாம். ஒரு செயலைச் செய்வதால் ஏற்படும் விளைவு நன்மையா? தீமையா எனப் பகுத்துப் பார்த்து, தீமையைத் தவிர்த்து நன்மையைச் செய்யத் தீர்மானிப்பது மனசாட்சியின் முக்கிய வேலை என்று சொல்லலாம்.
பழனி கந்தசாமி என்பவர் காவல்துறையில் பணியாற்றியபோது தனக்கு நடந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறார்
நான் தஞ்சாவூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் இரவு 8 மணிக்கு அலுவலக வாகனத்தில் என் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது இலேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. மின்சாரமும் இல்லை. சாலை முழுவதும் இருட்டு. என் வீட்டிற்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது ஒரு வயதான அம்மா கையைக் காட்டி என் வாகனத்தை நிறுத்தினார். நானும் வாகனத்தை நிறுத்தி என்ன விடயம் என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மா, "என் மகளுக்கு பிரசவ வலி வந்திருக்கிறது. உடனே மருத்துவமனைக்குப் போகவேண்டும். இந்த இருட்டிலும் மழையிலும் ஒரு ஆட்டோகூட இந்தப் பக்கம் வரவில்லை. நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்" என்றார்கள். அரசு வண்டியை சொந்தக் காரியங்களுக்குப் பயன் படுத்தக்கூடாது என்பது சட்டம். ஆனால் அங்கு நான் எதிர்கொள்வது ஒரு மனிதாபிமானப் பிரச்சனை என்பதால், சரி, வாருங்கள் என்று அந்த அம்மாவின் வீட்டிற்குச் சென்று அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு, நான்கு கி.மீ. தூரத்திலிருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தேன். நான் செய்தது சட்டத்திற்குப் புறம்பாயிருக்கலாம். ஆனால் என் மனசாட்சியின்படி அது ஒரு மனிதாபிமானச் செயல். அதை நான் செய்திருக்காவிடில் என் ஆயுள் முழுவதும் என் மனசாட்சி என்னைக் குத்திக்கொண்டே இருந்திருக்கும். இச்செயலுக்காக எனக்கு ஏதும் தண்டனை வந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன்...
என்று தனது blogல் பகிர்ந்து கொண்டுள்ளார் பழனி கந்தசாமி. மனசாட்சியின் குரலைக் கேட்டு நடப்பவர்கள் நன்மை செய்யவும், உண்மையைச் சொல்லவும் தயங்க மாட்டார்கள். அதனால்தான் ஒருவர் கெடுதல் செய்யும்போது, "உனக்கு மனசாட்சி இருந்தா இப்படி செய்வியா..?", மனசாட்சிக்குப் பயந்து நடந்துக்கோ...."என்று மற்றவர் எச்சரிக்கின்றனர். மனசாட்சியின் வேலை எப்பொழுதும் நன்மையை நோக்கி நடத்திச் செல்வதாய் இருந்தாலும், நிலையற்ற மனித எண்ணங்களும், மனிதர் வாழும் சூழல் மற்றும் சமூகமும் மனசாட்சியின் செயல் திறத்தை பல நேரங்களில் மாற்றி விடுகின்றன. பேராசை, கோபம், சிற்றின்பம், விரக்தி, மனச்சோர்வு போன்றவை மனிதர்களில் பொங்கியெழும்போது மனசாட்சியின் குரல் கேட்கப்படுவதில்லை. கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்தாத மனிதர் கணநேரத்தில் எத்தனை கொலைகளைச் செய்கின்றனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதால் எத்தனை குற்றங்கள் இடம்பெறுகின்றன. பாட்னாவில் வழக்கு ஒன்றில், சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்த, எட்டு வயது சிறுமி உஸ்மா ஆரா என்பவரை உள்ளூர் தாதா பாபி கான் என்பவனும், அவனின் கூட்டாளிகளும், அச்சிறுமியை இழுத்துச் சென்று, அவளின் வலது கையைத் துண்டித்துள்ளனர் என்று இச்சனிக்கிழமை நாளிதழில் ஒரு செய்தி இருந்தது. இப்படி, கொலை, கொள்ளை, வன்முறை போன்ற சமூகச் சீர்கேடுகளைச் செய்பவர்கள் நல்ல மனசாட்சியுடையவர்கள் அல்ல. தங்களது எதிர்மறை உணர்வுகளைக் கட்டுப்படுத்தாத மனிதர்கள், தங்களது மனசாட்சியின் குரலைக் கேட்டு நடப்பது கடினம். மேலும், பிறர் செய்த தவற்றைக் கண்டிக்கும் ஒருவர், அதேசெயலைத் தான் செய்யும்போது அதற்கு நியாயம் சொல்லித் அதிலிருந்து தப்பிப்பதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட மனிதர்கள் தங்களது மனசாட்சியை மழுங்கடிகத்துவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். தனக்கு ஒரு நீதி, அடுத்தவருக்கு ஒரு நீதி என்று செயல்படுகிறவர்கள் எப்படி மனசாட்சியின்படி நடக்கின்றார்கள் எனச் சொல்ல முடியும்? தன்னலம் மனசாட்சியின் குரலை அமுக்கி விடுகின்றது.
ஆனாலும், மண்டியிட்டு வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது மேல் என்ற கூற்றுப்போல தங்களது மனசாட்சி நல்லது என உணர்த்துவதை நடைமுறைப்படுத்தும் நல்ல மனிதர்கள் பலரைப் பார்க்கிறோம். உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரவீன் போன்று, நல்ல செயல்களுக்காகத் தங்களது உயிரையும் துச்சமெனக் கருதிச் செயல்படுகின்றவர்களைச் சமூகம் போற்றுகின்றது.
நீ பிறருக்காக என்ன செய்கிறாய் என்பது ஒவ்வொருவரும் வாழ்க்கையில் விடாப்பிடியாக, வற்புறுத்திக் கேட்க வேண்டிய கேள்வி என்று மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் சொன்னார். முத்திப்பேறுபெற்ற Alfonso Maria Fusco, எனது நிழல்கூட மற்றவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சொன்னார். "யாரும் அவர்களது அழுக்கான பாதங்களோடு எனது மனது வழியாக நடப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்" என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆம், உண்மை, நன்மை, கடவுளின் குரல் ஆகியவற்றின் பாதையில் இட்டுச்செல்வது நல்ல மனசாட்சி. அன்பு நேயர்களே! அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவருக்கே என்ற நியதியில் வாழ்ந்தால் நமது மனசாட்சி உணர்த்திக் கொண்டிருக்கும் நல்ல பாதையில் நாம் என்றென்றும் நடப்போம்.







All the contents on this site are copyrighted ©.