2013-06-29 15:25:46

பேராயர் சுள்ளிக்காட் : பாலியல் வன்முறைக்குச் சரியான பதில் பழிவாங்குதல் அல்ல


ஜூன்,29,2013. போர் இடம்பெறும் இடங்களில் நடத்தப்படும் பாலியல் வன்முறைக்குச் சரியான பதில் பழிவாங்குதல் அல்ல, ஏனெனில் இது தொடர் வன்முறைக்கு இட்டுச்செல்லும் என, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் கூறினார்.
“பெண்கள், அமைதி, பாதுகாப்பு : மோதல்கள் இடம்பெறும் இடங்களில் பாலியல் வன்முறை” என்ற தலைப்பில் நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா.பாதுகாப்பு அவை நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் சுள்ளிக்காட் இவ்வாறு கூறினார்.
பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும், இளையோரையும் முதியோரையும் பாதிக்கும் இக்கொடூரச் பாலியல் வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பேராயர் சுள்ளிக்காட், இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், நலவாழ்வு குறித்த ஐ.நா. கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பேராயர் சுள்ளிக்காட், உலகில் 5 வயதுக்குட்பட்ட 19 ஆயிரம் சிறார் தடுத்துநிறுத்தக்கூடிய நோய்களால் தினமும் இறக்கின்றனர் என்ற கவலையையும் வெளியிட்டார்.
உலகிலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் ஏறக்குறைய பாதிப்பேர் மட்டுமே அதற்கான சிகிச்சையைப் பெறுவதற்கு வாய்ப்புப் பெற்றுள்ளனர் என்றும், மனிதர் மற்றும் அவர்களின் நலவாழ்வு குறித்த தேவைகளை அனைத்துலகச் சமுதாயம் முழுமையாகப் புரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் பேராயர் சுள்ளிக்காட்.
5,400 மருத்துவமனைகள், 17,500 சிறு மருத்துவமனைகள், 567 தொழுநோயாளர் பராமரிப்பு மையங்கள், 15,700 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மையங்கள் ஆகியவற்றைத் திருஅவை நடத்துகின்றது, இவை மக்களின் நலவாழ்வில் திருப்பீடம் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகின்றது என்றும் கூறினார் பேராயர் சுள்ளிக்காட்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.