2013-06-28 15:57:39

திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் பொறுமையாய் இருக்குமாறு கேட்கிறார் ஆண்டவர்


ஜூன்,28,2013. நம் ஆண்டவர் நம்மோடு எப்போதும் பொறுமையாய் இருக்கிறார், ஆதலால் நாமும் பொறுமையாய் இருக்குமாறு ஆண்டவர் கேட்கிறார் என்று இவ்வெள்ளிக்கிழமையன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் வாழ்வில் கடவுள் எப்படித் தலையிடுகிறார் என்பதற்கு எவ்விதமான வழிமுறைகளும் கிடையாது, சிலவேளைகளில் உடனடியாகத் தலையிடுகிறார், சிலவேளைகளில் நாம் சிறிது பொறுமையோடு காத்திருக்க வேண்டியிருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில், இந்நாளைய வாசகங்களை மையமாக வைத்து மறையுரையாற்றியபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இறைவன் நம் வாழ்வில் எப்படி, எப்பொழுது தலையிடுவது என்பதை அவர் தேர்ந்தெடுக்கிறார் என்று கூறினார்.
99 வயதான ஆபிரகாமுக்கு ஒரு மகன் பிறப்பான் என்ற வாக்குறுதியை ஆண்டவர் அளித்தபோது, ஆபிரகாமின் வாழ்வில் அவர் மெல்லமெல்ல நுழைந்தார், மாறாக தன்னைக் குணமாக்குமாறு கேட்டத் தொழுநோயாளரின் வாழ்வில் ஆண்டவர் உடனடியாக நுழைந்து அவரைத் தொட்டுக் குணமாக்கிப் புதுமை செய்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.
ஆண்டவர் நம் வாழ்வில் நுழையும்போது எப்பொழுதும் ஒரேமாதிரிச் செய்வதில்லை, ஒரு நேரம் ஒரு வழியிலும், மற்றொரு நேரம் வேறொரு வழியிலும் தலையிடுகிறார், ஆனால் அவர் எப்போதும் தலையிடுகிறார், நமக்கும் நம் ஆண்டவருக்கும் இடையே சந்திப்பு எப்போதும் நிகழ்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் பொறுமை குறித்த பேருண்மை பற்றி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், நம் வாழ்வின் இருளான துன்ப நேரங்களில், அவற்றிலிருந்து விடுதலை பெறுவற்கு 5 நிமிடங்கள் இருந்தால்கூட அந்நேரத்துக்கு முன்னர் நாம் அதிகமாக பொறுமையிழக்கிறோம் என்றும் கூறினார்.
இயேசு தன்னைச் சிலுவையிலிருந்து இறங்கிவருமாறு தனக்குச் சவால்விடப்பட்டதை அவர் கேட்டார், அவர்போல் நாமும் இறுதிவரை பொறுமை காக்க வேண்டும், ஏனெனில் அவர் நம்மோடு பொறுமையாக இருக்கிறார் என்று மறையுரையில் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.