2013-06-28 15:45:05

ஜூன் 29, 2013. கற்றனைத்தூறும்...... உலக அதிசயங்கள் பட்டியல் உருவான வரலாறு!


கிரேக்க நாட்டை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள்தான் முதன் முதலில் உலக அதிசயங்களை பட்டியலிட்டவர்கள்.
கிரேக்கத்தில் தோன்றிய புகழ் பெற்ற ஹெல்லினிஸ்டிக் நாகரீகத்தைச் சேர்ந்த நாடோடி மக்கள், பயணத்தின்போது தாங்கள் கண்டு வியந்த இடங்கள் மற்றும் கட்டங்களை தங்களிடமிருந்த கைக்குறிப்பேடுகளில் குறித்து வைத்துக் கொண்டனர்.
கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் புகழ் பெற்று விளங்கிய அண்டிபாட்டர் (Andipater) என்ற கவிஞரின் கைகளில் இந்த பட்டியல் அடங்கிய குறிப்புகள் ஒரு நாள் தற்செயலாக கிடைக்க, ஆர்வமடைந்த அவர் அந்த இடங்களை நேரில் சென்று பார்த்து, பயணமுடிவில் கி.மு. 140-ஆம் ஆண்டு அவர் எழுதிய கவிதை ஒன்றில் ‘அதிசயங்கள்-7’ என்ற தலைப்பில் கிசாவின் பெரிய பிரமிட் (எகிப்து, கி.மு-2680), பபிலோனின் தொங்கு தோட்டம் (Iraq, கி.மு.600), ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை (Greece, கி.மு-433), ஆர்ட்டெமிஸ் கோயில் (Turkey, கி.மு.350(பழையது) & கி.பி.550(புதியது), மௌசோல்லொஸின் மௌசோலியம் (Turkey, கி.மு.350) ரோடொஸின் கொலோசஸ் (Greece, கி.மு.280), அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம் (Egypt, கி.மு.300) ஆகிய ஏழு இடங்களின் கட்டுமானம் பற்றி வியந்து குறிப்பிட்டார். பதினாறாம் நூற்றாண்டு வரை ஆண்டிபாட்டர் பட்டியலிட்ட அதிசயங்கள் தான் உலக அதிசயங்களாக வழக்கத்தில் இருந்தன. எகிப்து பிரமிடைத் தவிர ஏனையவை அழிந்துவிட்டதால் பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகு சில எழுத்தாளர்கள் உலக அதிசயங்கள் என்று வேறு சில இடங்களை பரிந்துரை செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் கோபான் ப்ரீவர் (Cobhan Brewer) என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர் 1870-ஆம் ஆண்டு, ஸ்டோன் ஹெஞ் (England), சிச்சென் இட்சா பிரமிட் (Mexico), கொலோசியம் (Italy, Rome), சீனப் பெருஞ்சுவர் (China) , பைசா நகர் சாய்ந்த கோபுரம், தாஜ் மஹால் (India), போன்றவைகளை புதிதாக உலக அதிசயங்களுக்கான தகுதியான கட்டிடங்களாக பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் 1999-ஆம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த பெர்னார்ட் வெபர் என்ற திரைப்பட இயக்குனர் அதிகாரப்பூர்வமான புதிய ஏழு உலக அதிசயங்களை கொண்ட பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
உலக அதிசயங்களை கொண்ட பட்டியல் மக்களின் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. 07-07-07, அதாவது, 2007-ஆம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள லிஸ்பன் நகரில் வெற்றி பெற்ற புதிய ஏழு உலக அதிசயங்களாக சிச்சென் இட்சா (Mexico), மீட்பர் கிறிஸ்து சிலை (Brazil), கொலோசியம் (Rome), சீனப் பெருஞ்சுவர் (China), மாச்சு பிச்சு (Peru), பெட்ரா (Jordan), தாஜ் மஹால் (India) ஆகியவை அறிவிக்கப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.