2013-06-27 16:35:59

வத்திக்கான் வங்கியின் செயல்பாட்டை கண்காணிக்கும் குழு - திருத்தந்தை நியமனம்


ஜூன்,27,2013. திருஅவையில், பணம், பொருளாதாரம் ஆகிய அம்சங்களும் நற்செய்தி விழுமியங்களின் அடிப்படையில் இயங்கவேண்டும் என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் விடுத்திருந்த அழைப்பின் அடிப்படையில், வத்திக்கானில் இயங்கி வரும் சமயப்பணிகள் நிறுவனத்தின் செயல்பாட்டை கண்காணிக்க ஒரு குழுவை நியமனம் செய்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆணை ஒன்றை விடுத்துள்ளார்.
1990ம் ஆண்டு விடுத்த ஓர் ஆணையின் வழியாக, முன்னாள் திருத்தந்தை, முத்திபேறு பெற்ற இரண்டாம் ஜான் பால் அவர்கள், வத்திக்கான் வங்கி என்று அழைக்கப்பட்டு வந்த நிறுவனத்தை, IOR என்ற பெயரில், சமயப்பணிகள் நிறுவனமாக உருவாக்கினார். இந்நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தீர ஆய்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கை, இவ்வாண்டு மார்ச் மாதம் வத்திக்கானில் கூடிய கர்தினால்கள் அவையில் முன் வைக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையிலும், பணம் தொடர்பான விடயங்களில் ஒளிவு மறைவு அற்ற சூழல் திருஅவையில் உருவாகவேண்டும் என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் விடுத்த அழைப்பின் அடிப்படையிலும் இந்தக் கண்காணிப்புக் குழுவை தான் உருவாக்கியுள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
IOR என்ற இந்த நிறுவனம், திருஅவையின் பணிகளுக்குத் துணை செய்யும் ஓர் அமைப்பாக இயங்கி வருகிறதா, இந்த அமைப்பில் மாற்றங்கள் தேவையா, என்பதை இந்த கண்காணிப்புக் குழு ஆய்வு செய்யவேண்டும் என்ற பொறுப்பை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்குழுவினருக்கு அளித்துள்ளார்.
திருஅவையின் பல்வேறு துறைகள் செயலாற்றுவதை ஆய்வு செய்வதற்கு 8 கர்தினால்கள் அடங்கிய குழுவொன்றை திருத்தந்தை ஏற்கனவே நிறுவியுள்ளதுபோல், திருஅவைத் துறைகளின் செயல்பாடுகளை முன்னேற்றும் ஒரு முயற்சியாக இதனைக் காண வேண்டும் என்று திருப்பீடச் செயலர் அருள் பணியாளர் Federico Lombardi இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
திருப்பீடம் இப்புதனன்று வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, இந்தக் கண்காணிப்புக் குழுவில், ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர். கர்தினால் Raffaele Farina அவர்களை தலைவராகவும், ஆயர் Juan Ignacio Arrieta Ochoa de Chinchetru அவர்களை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்ட இக்குழுவில், கர்தினால் Jean-Louis Tauran ஓர் உறுப்பினராகச் செயலாற்றுவர்.
நீதித்துறை இயலில் முனைவர் பட்டம் பெற்றவரும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தூதராக, வத்திகானில் பணியாற்றிவருமான, Mary Ann Glendon என்ற பெண்மணியும் இக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் உடனடியாகத் துவங்கும் என்றும் திருத்தந்தையின் ஆணைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.