2013-06-27 16:36:44

பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகளைப் போன்று இருவகை கிறிஸ்தவர்கள் - திருத்தந்தை


ஜூன்,27,2013. கிறிஸ்துவர்கள் என்று வேடமணிந்திருப்போர் மேலோட்டமான கருத்துக்கள் உடையவர்களாக, அல்லது, சட்டதிட்டங்களை மிகவும் கடுமையாகப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர் என்று திருத்தந்தை இவ்வியாழனன்று வழங்கிய மறையுரையில் குறிப்பிட்டார்.
புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலைத் திருப்பலியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகளைப் பற்றி மத்தேயு நற்செய்தியில் காணப்படும் வரிகளை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
"ஆண்டவரே, ஆண்டவரே" என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டு, வார்த்தைகளை மட்டுமே நம்பி வாழும் மக்கள் மணலில் வீடு கட்டுவோர் என்றும், கிறிஸ்து என்ற பாறையை நம்பி வாழும் மக்கள் பாறையின் மீது வீடு கட்டியவர்கள் என்றும், இன்று கிறிஸ்தவர்கள் வாழும் இருவேறு வழிகளை, திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்தவ வாழ்வு உறுதியாக அமையவேண்டும் என்ற ஆவலில் பலர் உறுதி என்பதை, கடுமை என்ற பொருள் கொண்டு, கிறிஸ்தவம் என்பது சட்டதிட்டங்களைக் கடுமையாகப் பின்பற்றுதல் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
மேலோட்டமான எண்ணங்கள் கொண்டிருப்பதும், கடுமையான கிறிஸ்துவத்தைக் கடைபிடிப்பதும் உண்மையான மகிழ்வையும் விடுதலையையும் தருவதில்லை. மாறாக, கிறிஸ்து என்ற பாறையைக் கொண்டு வாழ்வதிலேயே உண்மையான விடுதலை கிடைக்கும் என்று கூறி, திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.