2013-06-27 16:38:24

சிரியாவில் கத்தோலிக்கக் குழுக்களின் துயர் துடைப்புப் பணிகளால் அதிகம் பலனடைவது இஸ்லாமியர்களே - பேராயர் சில்வானோ தொமாசி


ஜூன்,27,2013. ஆயுதம் தாங்கிய மோதல்கள் அப்பாவி உயிர்களைப் பலி வாங்குவதுடன், பல்லாயிரம் குடும்பங்களை வேரோடு சாய்க்கின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. அவையில் கவலையை வெளியிட்டுள்ளார்.
ஜெனீவாவில் இயங்கும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், UNHCR எனப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் 57வது கூட்டத்தில் இப்புதனன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
கடந்த 12 மாதங்களில் அரசுக்கும், ஏனையக் குழுவினருக்கும் இடையே நடைபெற்ற ஆயுத மோதல்களால், கட்டாயமாகப் புலம் பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாகியுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்த பேராயர் தொமாசி, ஆயுத மோதல்கள் நிகழும் பல பகுதிகளில் மத நம்பிக்கை கொண்ட பல்வேறு குழுக்கள் பணியாற்றுவதையும் எடுத்துரைத்தார்.
சிரியாவில் கத்தோலிக்கக் குழுக்கள் மேற்கொண்டுள்ள துயர் துடைப்புப் பணிகள் பற்றி சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, இப்பணிகளால் அதிகம் பலனடைவது இஸ்லாமியர்களே என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
போர்களங்களாக மாறியுள்ள பல நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் பணியாற்ற, பன்னாட்டு பணி அமைப்புக்களை அரசுகள் அனுமதிக்கும்படி ஐ.நா., உலக அரசுகளை நிர்ப்பந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் பேராயர் தொமாசி தன் உரையின் இறுதியில் குறிப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.