2013-06-26 16:12:43

'பாலியம்' எனப்படும் கழுத்துப் பட்டையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து 34 பேராயர்கள் பெறுவார்கள்


ஜூன்,26,2013. ஜூன் 29ம் தேதி வருகிற சனிக்கிழமையன்று கொண்டாடப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் பெருவிழாவன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெறும் திருப்பலியில் 34 பேராயர்கள் 'பாலியம்' எனப்படும் கழுத்துப் பட்டையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து பெறுவார்கள்.
சென்னை மயிலைப் பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள், விசாகப்பட்டினம் பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு அவர்கள், மற்றும் டில்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள் உட்பட உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகை தரும் பேராயர்களுக்கு, சனிக்கிழமை காலை நடைபெறும் திருப்பலியின் துவக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'பாலியம்' வழங்குகிறார்.
புனித பேதுருவின் வழித் தோன்றலென அழைக்கப்படும் உரோமைய ஆயருக்கும், உலகின் பல்வேறு உயர் மறைமாவட்டங்களின் பேராயர்களுக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்தும் வண்ணம் இந்த நிகழ்வு அமைந்துள்ளதால், புனித பேதுரு, பவுல் ஆகிய இரு பெரும் திருத்தூதர்களின் பெருவிழாவன்று 'பாலியம்' வழங்கப்பட்டு வருகிறது.
தனிப்பட்ட முறையில் வளர்க்கப்படும் செம்மறிகளின் உரோமத்திலிருந்து உருவாக்கப்படும் இந்தக் கழுத்துப்பட்டை, பேராயர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆடுகளைக் கண்காணிக்கும் ஆயர்கள் என்பதை உணர்த்துவதாகவும், இந்தக் கழுத்துப் பட்டையில் பொருத்தப்படும் ஊசிகள், கிறிஸ்துவைச் சிலுவையில் அறைய பயன்படுத்தப்பட்ட ஆணிகளை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.