2013-06-26 14:41:51

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஜூன்,26,2013. கடந்த வாரத்தில் உரோம் நகரில் இடம்பெற்ற வெயிலின் தாக்கத்தோடு ஒப்பிடும்போது இவ்வார வெயிலின் கொடூரம் சிறிது சிறிதாகக் குறைந்துவருகிறது என்றே சொல்லவேண்டும். இப்புதன் காலையும் வெயில் மிதமாக இருக்க, தூய பேதுரு பேராலய வளாகம் வழக்கம்போல் திருத்தந்தையின் பொதுமறைபோதகத்திற்கென நிரம்பி வழிந்தது. 'திருஅவை, தூய ஆவியின் ஆலயம்' என்ற தலைப்பில் விசுவாசப்பிரமாணம் குறித்த தன் பொதுமறைபோதகத்தைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவை, கடவுளின் ஆலயம் என்பது குறித்து இன்று நோக்குவோம். மன்னன் சாலமன் கட்டிய யெருசலேமின் மிகப்பெரும் கோவில், செபத்தின் இடமாகவும், இறைவனைச் சந்தித்து உரையாடும் இடமாகவும் இருந்தது. அதுவே திருஅவையின் முன்னடையாளமாகவும் இருந்தது. நம்மிடையே வந்து குடிகொண்ட மனு உருவான இறைமகன் இயேசுகிறிஸ்துவே, வாழும் ஆலயமாகவும் அதன் முழுமையாகவும் இருந்தார். அவரிலே நாம் இறைபிரசன்னத்தை நேரடியாகச் சந்திக்கிறோம். இயேசு தன் மறையுடலின் அங்கத்தினர்களாக நம்மை ஆக்குகிறார். இறைவனில் தூய இருப்பிடத்தைக் கட்டியெழுப்ப நம்மை உயிருள்ள கற்களாக மாற்றுகிறார். இங்கு நாம் ஆன்மீகப்பலிகளை அர்ப்பணித்து நம் திருமுழுக்குக் குருத்துவத்தைச் செயல்படுத்துகிறோம். தூயஅவியானவர் தன் பல்வேறுபட்ட கொடைகள் மூலம், நாம் திருஅவையைப் புனிதத்துவத்தில் கட்டியெழுப்புவதில் பங்காற்ற நம்மை ஒன்றிணைக்கிறார் மற்றும் ஊக்கமூட்டுகிறார். இந்த மிகப்பெரும் பணியில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உள்ளது. இறைவனின் தூய ஆலயத்தின் வனப்புக்கும் வளர்ச்சிக்கும், உயிருள்ள கற்களாகிய நாம் தேவைப்படுகிறோம்,. இயேசுவை நம் மூலைக்கல்லாகத் தேர்ந்துகொண்டு, தூய ஆவியின் வழிகாட்டுதலுடன் திருஅவையின் வாழ்விலும் மறைப்பணியிலும் மேலும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க நமக்கு உதவுமாறு இறைவனை நோக்கி வெண்டுவோம்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
பிறரன்பு, பொறுமை, கனிவு என்பவை மிக அழகான கொடைகள். அவைகளை நீங்கள் பெற்றிருந்தால், அவைகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வருவீர்கள், என புதன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.








All the contents on this site are copyrighted ©.