2013-06-26 16:11:18

தந்தையாக இருக்கும் ஆவல், அருள் பணியாளர்கள் உட்பட, அனைத்து மனிதருக்கும் உள்ள ஆவல் - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,26,2013. தந்தையாக இருக்கும் ஆவல், அருள் பணியாளர்கள் உட்பட, அனைத்து மனிதருக்கும் உள்ள ஆவல் என்றும், இந்த ஆவல் இல்லாதவர்கள் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இப்புதன் காலை, புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் திருப்பலி ஆற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்தையாகச் செயலாற்றும் ஆவல் அனைவருக்கும் பொதுவானதென்றும், வாழ்வு அளிப்பதும், அதைப் பேணுவதும் அனைவரிடமும் உள்ள வேட்கை என்றும் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
தந்தையாகும் பேறு தனக்கில்லை என்று ஏங்கிய ஆபிராமுக்கு, வானில் உள்ள விண்மீன்களைப் போல அவர் மக்களைப் பெறுவார் என்று தொடக்க நூலில் இறைவன் அளித்த வாக்குறுதியை தன் மறையுரையின் மையமாக்கினார் திருத்தந்தை.
அருள் பணியாளர்களை மக்கள் 'தந்தையே' என்று அழைக்கும்போது, தந்தைக்குரிய பாதுகாப்பை அருள் பணியாளர்கள் வழங்குவர் என்ற எதிர்பார்ப்பில் இந்த மரியாதை வழங்கப்படுகிறது என்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
தன் குருத்துவப் பிணியின் 60 ஆண்டு வைர விழாவைக் கொண்டாடிய பலேர்மோவின் முன்னாள் பேராயர் கர்தினால் Salvatore De Giorgi அவர்கள், திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியாற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.