2013-06-26 16:25:26

சித்ரவதைகளைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே அரசுகளின் கடமை அல்ல - ஐ.நா. பொதுச் செயலர்


ஜூன்,26,2013. சித்ரவதைகளைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே அரசுகளின் கடமை அல்ல, மாறாக, சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்குத் தகுந்த ஈடு செய்வதும், அவர்களுக்கு மறுவாழ்வு தரும் முயற்சிகளில் ஈடுபடுவதும் அரசின் கடமை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஜூன் 26ம் தேதி, இப்புதனன்று கடைபிடிக்கப்படும், சித்ரவதைகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் உலக நாளையொட்டி (International Day in Support of Victims of Torture) செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், மனித மாண்பை அழிக்கும் ஒரு கருவியாக சித்ரவதைகள் இக்காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன என்ற தன் கவலையை வெளியிட்டார்.
சமுதாயத்தில் குறிப்பிட்ட குழுவினரை அச்சத்தில் வாழவைப்பதற்காக, ஒரு சில நாடுகளில் அரசுகளே சித்ரவதைகளைப் பயன்படுத்துகின்றன என்ற தகவலையும் பான் கி மூன் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு கடைபிடிக்கப்படும், சித்ரவதைகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் உலக நாளுக்கு, 'மறுவாழ்வு அமைத்தல்' என்பது ஐ.நா.அவையால் மையப்பொருளாக வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.